பெர்த்:இந்திய கிரிக்கெட் வரலாற்றில் கபில் தேவுக்கு பின்னர் முதல் முறையாக வேகப்பந்து வீச்சாளர் ஒருவர் கேப்டனாக பொறுப்பேற்று உள்ளார். இந்திய அணி வரலாற்றில் பேட்ஸ்மேன்கள் மட்டுமே அதிகளவில் கேப்டன்களாக இருந்து வந்த நிலையில் நீண்ட நாட்களுக்கு பின்னர் பும்ரா அணியை வழிநடத்த உள்ளார்.
கபில் தேவ், அனில் கும்பிளே ஆகியோருக்கு ஒபின்னர் சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணியை வழிநடத்தும் மூன்றாவது பந்துவீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னரும் இங்கிலாந்து அணிக்கு எதிராக ஒரு போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக பும்ரா செயல்பட்டு இருக்கிறார்.
இந்த நிலையில் பார்டர் கவாஸ்கர் கோப்பையை அறிமுகம் செய்த பின், இந்திய அணியின் கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பும்ரா பேசுகையில், பார்டர் கவாஸ்கர் கோப்பைக்காக இந்திய அணி வீரர்கள் சிறப்பாக தயாராகி இருக்கின்றனர். 10 நாட்களுக்கு முன்பாகவே ஆஸ்திரேலியா வந்து தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டிருக்கிறோம்.
கடந்த 2 முறையும் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டுள்ளது. இந்த முறையும் அந்த பொறுப்பு இந்திய இளம் வீரர்களின் கைகளில் தான் உள்ளது. அதனை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. இந்திய அணியின் வழிநடத்துவது மிகப்பெரிய பெருமையாக நினைக்கிறேன்.
விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோருக்கு எப்படி வித்தியாசமான ஸ்டைல் இருந்ததோ, அதேபோல் எனக்கும் வேறு ஸ்டைல் இருக்கிறது. அதன்படி களத்தில் இந்திய அணி வழிநடத்துவேன். கேப்டனாகி விட்டதால் உயர்ந்தவர் என்பது கிடையாது, இதனை ஒரு பொறுப்பாக மட்டுமே பார்க்கிறேன்.
எப்போதும் பொறுப்பை எடுத்து கொண்டு செயல்படுவது பிடித்தமானது. அதனால் எந்த அழுத்தமும் இல்லை. இங்கு வருவதற்கு முன்பாகவே கேப்டன்சி குறித்து ரோகித் சர்மாவுடன் பேசினேன். ஆனால் ஆஸ்திரேலியா வந்த பின் தான், இந்திய அணியை வழிநடத்துவது குறித்து தெளிவு கிடைத்தது.
இந்திய அணியின் பிளேயிங் லெவனை ஏற்கனவே முடிவு செய்துவிட்டோம். நாளை பெர்த் மைதானத்தில் டாஸ் போடப்பட்ட பின், அனைவரும் யார் யார் களமிறங்குகிறார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம். அதேபோல் நீண்ட நாட்களாகவே வேகப்பந்து வீச்சாளர்களும் கேப்டனாக செயல்படலாம் என்று பேசி வந்திருக்கிறேன். ஏனென்றால் திட்டங்களை செயல்படுத்துவதில் வேகப்பந்து வீச்சாளர்கள் சிறந்தவர்கள் என்று நினைக்கிறேன்.
ஆஸ்திரேலியா அணிக்காக பேட் கம்மின்ஸ் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இதற்கு முன்பாகவும் வேகப்பந்து வீச்சாளர்கள் கேப்டன்களாக ஏராளமான வெற்றிகளை பெற்றுள்ளார்கள். இந்தியாவிலேயே கபில் தேவ் இருந்திருக்கிறார். தற்போது அந்த பாரம்பரியம் மீண்டும் வந்திருப்பதாக நினைக்கிறேன். கடந்த 2 முறையும் ஆஸ்திரேலியா மண்ணில் வென்றிருப்பதால், எந்த அழுத்தமும் எங்களுக்கு கிடையாது.
வெற்றியோ, தோல்வியோ, விளையாட்டின் அழகே ஒவ்வொரு முறையும் ஜீரோவில் இருந்து தொடங்க வேண்டும் என்பது தான். அதனால் நாங்கள் எந்த வெற்றியையும் தலையில் சுமந்து கொண்டு வரவில்லை. மேலும் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி எப்போதும் ஒரு அங்கமாக இருந்து வந்துள்ளார். இந்திய அணி நிர்வாகம் அவரை தீவிரமாக கண்காணித்து வருகிறது. எல்லாம் சரியாக சென்றால், ஆஸ்திரேலியா மண்ணிலும் அவர் விளையாட வாய்ப்புள்ளது என்று கூறினார்.
இதையும் படிங்க:இந்திய அணியில் முகமது ஷமி.. மெகா அப்டேட் கொடுத்த பும்ரா!