ஐதராபாத்:58 வயதான பிரபல குத்துச்சண்டை ஜாம்பவான் மைக் டைசன் சுமார் 19 ஆண்டுகளுக்கு பின் ஜேக் பால் என்ற 27 வயதான தொழில்முறை குத்துச்சண்டை வீரருக்கு எதிராக தொழில்முறை போட்டியில் பங்கேற்றார். பல ஆண்டுகளுக்கு பிறகு டைசன் போட்டியில் பங்கேற்பதால் போட்டியின் மீதான சுவாரஸ்யம் அதிகரித்தது.
மைக் டைசனை எதிர்த்து களமிறங்கிய 27 வயதே ஆன இளைஞர் ஜேக் பால் குறித்து பல விமர்சனங்கள் சுற்றின. அதேநேரம் போட்டி நடப்பதற்கு இரு நாட்களுக்கு முன்னர் இருவரும் சந்தித்துக் கொள்ளும் நிகழ்வு நடந்தது. இதில் உணர்ச்சிவசப்பட்ட மைக் டைசன், பால் ஜேக்கை தாக்கி அடித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தப் போட்டியில் எட்டு சுற்றுகளின் முடிவில் ஜேக் பால் புள்ளிகள் அடிப்படையில் மைக் டைசைனை வீழ்த்தினார். இந்தப் போட்டியில் ஜேக் பால் 278 முறை மைக் டைசனை தாக்க முயன்றார். அதில் 78 தாக்குதல்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டன. மறுபுறம் மைக் டைசன் 97 முறை மட்டுமே ஜேக் பாலை தாக்க முயன்றார்.
அதில் 12 தாக்குதல்கள் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டன. இரண்டு நடுவர்களில் ஒருவர் 80-க்கு 72 எனவும், மற்றொருவர் 79-க்கு 73 எனவும் ஜேக் பாலுக்கு சாதகமாக புள்ளிகளை வழங்கினார். இந்தப் போட்டியில் மூன்றாவது சுற்றுக்கு பின் மைக் டைசன் ஒவ்வொரு சுற்றிலும் தன்னை தற்காத்துக் கொள்வதில் தான் அதிக நேரத்தை செலவிட்டதால் மேற்கொண்டு பதிலடி கொடுக்க முடியாமல் போனது.
ஐந்தாவது சுற்றின் போது ஜேக் பால் அதிக வித்தியாசத்தில் புள்ளிகளை பெற்று விட்டதால் அதன் பின் நாக் அவுட் செய்வது மட்டுமே மைக் டைசனுக்கு ஒரே வெற்றி வாய்ப்பாக இருந்த நிலையில் அதை அவரால் செய்ய முடியவில்லை. ஆனால், ஜேக் பாலின் தாக்குதல்களில் இருந்து தன்னை தற்காத்துக் கொள்வதே அவருக்கு கடினமான விஷயமாக இருந்தது.
இறுதியில் ஜேக் பாலிடம், மைக் டைசன் சரணடைந்தார். மைக் டைசனின் தோல்வியை சற்றும் எதிர்பாராத ரசிகர்கள் சமூக வலைதளங்களில் போட்டிக்கு எதிராக கடும் எதிர்ப்புகளை தெரிவித்தனர். முன்னதாக இந்த போட்டியில் கலந்து கொள்ள மைக் டைசனிடம் 170 கோடி ரூபாய் வரை ஒப்பந்தம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதேநேரம் போட்டியில் வெற்றி பெற்ற ஜேக் பால்க்கு பரிசுத் தொகையாக 337 கோடி ரூபாய் வரை கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க:2வது முறையாக தந்தையான ரோகித் சர்மா! குழந்தைக்கு என்ன பெயர் தெரியுமா?