விசாகப்பட்டினம்:இந்திய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. ஐதராபாத்தில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1க்கு 0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்தில் உள்ள ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி கிரிக்கெட் மைதானத்தில் வரும் பிப்ரவரி 2ஆம் தேதி முதல் 6ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டியில் காயம் காரணமாக கே.எல்.ராகுல் மற்றும் ரவீந்திர ஜடேஜா விலகியுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
ஐதராபாத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியின் போது ஜடேஜாவுக்கு தொடையில் காயம் ஏற்பட்டது. இதேபோல் கேஎல் ராகுலுக்கு வலது காலில் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக இருவரும் 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து விலகியுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. மேலும் இருவரின் உடல்நிலையைக் குறித்து தீவிரமாகக் கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.
இவர்கள் இருவருக்குப் பதிலாக இரண்டாவது டெஸ்ட் போட்டியில், தமிழகத்தைச் சேர்ந்த ஆல்-ரவுண்டரான வாஷிங்டன் சுந்தர், முதல் தர கிரிக்கெட் போட்டியில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் சர்பராஸ் கான் மற்றும் சௌரப் குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீண்ட நாள் கனவு:இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் தேர்வு செய்யப்பட்டுள்ள சர்ஃபராஸ் கான். கடந்த 3 ஆண்டுகளாக முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் அதிரடியாக விளையாடி வரும் 26 வயதான சர்ஃபராஸ் கான். 45 முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 14 சதங்கள், 11 அரைசதங்கள் என 3 ஆயிரத்து 912 ரன்களை குவித்துள்ளார்.
அதிகபட்சமாக 301 ரன்கள் குவித்து உள்ளார். மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் கலக்கி வரும் இவரின் சராசரி 69 ஆகும். ஒவ்வொரு முறை இந்திய அணி அறிவிக்கப்படும் போதும் இவரின் பெயர் எங்காவது இடம் பொறுமா என்று பல நாள்கள் ஆவலுடன் காத்துக் கொண்டு இருந்த சர்ஃபராஸ் கானுக்கு இந்த முறை வாய்ப்பு கிடைத்துள்ளது.
சவுரப் குமார்:மற்றொரு வீரரான சவுரப் குமார், 68 முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி உள்ளார். இதில் இவர், 22 முறை 5 விக்கெட்டுகளையும், 8 முறை 10 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தியுள்ளார். மொத்தமாக 290 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கும் இவருக்கு முதல் டெஸ்ட் போட்டிக்கான அறிமுகம் கிடைக்குமா என்று பொறுத்து இருந்து தான் பார்க்கவேண்டும்.
2வது டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கான உத்தேச இந்திய அணி:ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷ்ரேயாஸ் ஐயர், கே.எஸ். பாரத் (விக்கெட் கீப்பர்), துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஸ்வின், அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகேஷ் குமார், ஜஸ்பிரித் பும்ரா (துணை கேப்டன்), அவேஷ் கான், ரஜத் படிதார், சர்பராஸ் கான், வாஷிங்டன் சுந்தர் மற்றும் சௌரப் குமார்.
இதையும் படிங்க:ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம்: இத்தாலி வீரர் ஜானிக் சின்னர் சாம்பியன்! 22 வயதில் பட்டம் வென்று அசத்தல்!