பாரீஸ்:பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்து இருந்த வினேஷ் போகத் (Vinesh Phogat), நிர்ணயிக்கப்பட்டத்தைவிட 100 கிராம் கூடுதல் எடையுடன் இருந்ததாகக் கூறி தகுதி நீக்கம் செய்யப்பாட்டர்.
வினேஷ் போகத் ஓய்வு:இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்யவுள்ளதாக இந்திய ஒலிம்பிக் சங்கம் அறிவித்துள்ளது. இந்த நிலையில், மல்யுத்த போட்டிகளிலிருந்து வினேஷ் போகத் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். மேலும் தனது சமூக வலைத்தளப்பக்கத்தில், "இனி போராட சக்தியில்லை" என உருக்கமாகப் பதிவிட்டுள்ளார். இது இந்திய ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
இதுகுறித்து வினேஷ் போகத் பதிவிட்டுள்ளதாவது, ''எனக்கு எதிரான போட்டியில் மல்யுத்தம் வென்று விட்டது. நான் தோற்றுப் போய் விட்டேன். என்னுடைய கனவு, மற்றும் தைரியம் எல்லாம் முற்றிலும் நொறுங்கி விட்டது. இனி என்னிடம் போராட சக்தி இல்லை. 2001 - 2024 மல்யுத்தத்துக்கு குட் பை'' என பதிவிட்டுள்ளார்.
நடந்தது என்ன?:பாரிஸ் ஒலிம்பிக் மகளிருக்கான 50 கிலோ எடைப் பிரிவில் நேற்று முன்தினம் நடைபெற்ற அரையிறுதியில் கியூபா வீராங்கனை யூஸ்னிலிஸ் குஸ்மேனுடன் மோதினார் வினேஷ் போகத். இதில் தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்திய வினேஷ் போகத் 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
இதன்மூலம், வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்ததுடன், ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றார். முன்னதாக நடைபெற்ற ரவுன்ட் ஆப் 16 சுற்று போட்டியில், நடப்பு ஒலிம்பிக் சாம்பியனான ஜப்பான் வீராங்கனை சுசய் யுய் (Susai Yui) எதிர்கொண்டார் வினேஷ் போகத்.