ராஜ்கோட்:இந்தியா -இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஹைதராபாத்தில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இங்கிலாந்து அணி 28 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன் பின்னர் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 1-க்கு 1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 3வது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள சவுராஸ்டிரா மைதானத்தில் இன்று (பிப். 15) தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்த போட்டியில் முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வந்த துருவ் ஜூரல், சர்ஃபராஸ் கான் ஆகிய இருவரும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் ஓப்பனராக களமிறங்கினர்.
இதில் ஜெய்ஸ்வால் 10 ரன்கள் எடுத்து இருந்த போது, ஜோ ரூட் வீசிய பந்தில் மார்க் வூட்டிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதனையடுத்து களமிறங்கிய சுப்மன் கில் வந்த வேகத்தில், ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆகி வெளியேறினார். பின்னர் வந்த ராஜ் படிதாரும் 5 ரன்களில் வெளியேறினார். இதனால் 33 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறியது.