தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஐசிசி சாம்பியன்ஸ் டிராஃபி 2025: இந்தியா -பாகிஸ்தான் மேட்ச் பாக்கணுமா? அப்போ நீங்க இந்த ஊருக்கு தான் போகணும்! - ICC CHAMPIONS TROPHY 2025

ஐசிசி சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில் இந்தியா - பாகிஸ்தான் பங்கேற்கும் போட்டிகள் இருநாடுகளிலும் நடத்தப்படாது எனவும், பொதுவான இடத்தில் (துபாய்) இப்போட்டிகள் நடத்தப்படும் என்றும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இன்று அறிவித்துள்ளது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credits - Getty Images)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 19, 2024, 8:05 PM IST

ஹைதராபாத்:ஐசிசி சாம்பியன்ஸ் டிராஃபி 2025 தொடரில் இந்தியா -பாகிஸ்தான் பங்கேற்கும் போட்டிகள் இருநாடுகளிலும் நடத்தப்படாது எனவும், அதற்கு பதிலாக இரு நாடுகளும் பங்கேற்கும் போட்டிகள் பொதுவான இடத்தில் (துபாய்) நடத்தப்படும் எனவும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இன்று அதிரடியாக அறிவித்துள்ளது.

ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு அடுத்தபடியாக, ஐசிசி சாம்பியன்ஸ் டிராஃபி முக்கியமான தொடராக கருதப்படுகிறது. இந்த தொடரை இந்த முறை பாகிஸ்தான் நடத்துகிறது. அடுத்த ஆண்டு பிப்ரவரி 19 ஆம் தேதி தொடங்கி மார்ச் வரை இந்தப் போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெற உள்ளன.

ஆனால், பாகிஸ்தானுக்கு சென்று விளையாட இந்திய அணி மறுத்துவிட்டதையடுத்து இத்தொடரில் இவ்விரு அணிகளும் பங்கேற்கும் போட்டிகள் இந்தியா, பாகிஸ்தானில் நடத்தப்படாமல், பொதுவான இடத்தில் நடத்தப்படும் என்று ஐசிசி இன்று அறிவித்துள்ளது.

அத்துடன் நடப்பாண்டு முதல் 2027 ஆம் ஆண்டு வரை, இந்தியா மற்றும் பாகிஸ்தானில் நடத்தப்படும் ஐசிசி போட்டி தொடர்களில், இ்வ்விரு நாடுகள் பங்கேற்கும் போட்டிகள் மட்டும் இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் அல்லாமல், பொதுவான இடத்தில் நடத்தப்படும் என்றும் ஐசிசி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதன்படி, அடுத்த ஆண்டு துவக்கத்தில் நடைபெறவுள்ள ஆண்கள் ஐசிசி சாம்பின்ஸ் டிராஃபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. இதில், பாகிஸ்தான் இந்தியாவுடன் மோதும் போட்டிகள் துபாயில் நடைபெறும் எனவும் ஐசிசி வட்டாரங்கள் சமீபத்தில் கூறியிருந்தன. இந்த நிலையில், இந்தியா -பாகிஸ்தான் அணிகள் பங்கேற்கும் போட்டிகள் தொடர்பாக ஐசிசி இன்று இவ்வாறு அறிவித்துள்ளது.

கடந்த 2017 இல், இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராஃபி இறுதி போட்டியில், விராட் கோலி தலைமையிலான இந்திய அணியை வீழ்த்திய பாகிஸ்தான் நடப்பு சாம்பியனாக விளங்குகிறது. 1998 ஆம் ஆண்டு முதல் சாம்பியன்ஸ் டிராஃபி போட்டி நடத்தப்பட்டுவரும் நிலையில் 2025 இல் தான் முதன்முறையாக இத்தொடரை பாகிஸ்தான் நடத்தவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இத்தொடருக்கான போட்டிகள் அட்டவணையை ஐசிசி விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சாம்பியன்ஸ் டிராஃபி தொடரை தவிர, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐசிசி பெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை இந்தியாவும், 2026 இல் நடைபெறவுள்ள ஆண்கள் டி20 உலகக்கோப்பை தொடரை இந்தியாவும், இலங்கையும் இணைந்து நடத்த உள்ளன.

ABOUT THE AUTHOR

...view details