ஐதராபாத்: சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் புதிய தலைவராக ஜெய்ஷா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். வரும் டிசம்பர் 1ஆம் தேதி முதல் ஐசிசியின் தலைவராக ஜெய்ஷா செயல்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 36 வயதான ஜெய்ஷா ஐசிசியின் முதல் இளம் தலைவர் என்ற சிறப்பை பெற்றுள்ளார்.
மேலும் ஐசிசியின் தலைமைப் பொறுப்பில் அங்கம் வகிக்கும் 5வது இந்தியர் மற்றும் 3வது ஐசிசி தலைவர் என்ற சிறப்பையும் ஜெய்ஷா பெற்று உள்ளார். இந்நிலையில், ஐசிசி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜெய்ஷாவுக்கு மாதம் எவ்வளவு சம்பளம் வழங்கப்படுகிறது, பிசிசிஐ செயலாளராக இருந்த போது எவ்வளவும் சம்பளம் பெற்றார், ஐசிசி மற்றும் பிசிசிஐ தலைவர், செயலாளர்களுக்கு என்னென்ன சலுகைகள் வழங்கப்படுகின்றன என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
ஐசிசி தலைவரின் சம்பளம் என்ன?
ஐசிசியில் கௌரவ பதவிகளில் இருப்பவர்களுக்கு நிலையான சம்பளம் கிடையாது. மாறாக அவர்களின் பயணம், ஆலோசனைக் கூட்டங்கள் போன்றவற்றிற்கான கொடுப்பனவுகள் மற்றும் செலவுகளுக்கான தொகை வழங்கப்படுகிறது. இருப்பினும், பயணம், ஆலோசனைக் கூட்டங்கள் அல்லது பிற வசதிகளுக்காக ஐசிசி அதிகாரிகளுக்கு எவ்வளவு பணம் வழங்குகிறது என்பதை இதுநாள் வரை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பிசிசிஐ தலைவர், செயலாளர், பொருளாளர் சம்பளம் எவ்வளவு?
அதேபோல் பிசிசிஐயின் தலைவர், செயலாளர் மற்றும் பொருளாளர் பதவிகளும் கவுரவ ரீதியிலான பதவிகளாகும். அந்த பதவிகளுக்கு நிலையான சம்பளம் என்பது கிடையாது. அதேநேரம் கொடுப்பனவுகள், பயணப் படி உள்ளிட்ட இதர சலுகைகள் வழங்கப்படுகின்றன. ஆலோசனைக் கூட்டம், பொது நிகழ்ச்சிகள் என அவர்கள் கலந்து கொள்ளும் அனைத்து நிகழ்வுகளுக்கும் தனியாக பயணப் படி, கொடுப்பனவு (allowances) உள்ளிட்டவைகள் வழங்கப்படுகின்றன.
மேலும், அவர்கள் மேற்கொள்ளும் செலவுகளை கிரிக்கெட் வாரியம் ஏற்றுக் கொள்கிறது. ஐசிசி கூட்டங்களில் கலந்து கொள்ள அவர்கள் வெளிநாடு பயணம் மேற்கொள்ளும் போது அதற்கு உண்டாகும் செலவுகள் மற்றும் ஒவ்வொரு நாளும் தலா ஆயிரம் டாலர் அதாவது இந்திய மதிப்பில் 82 ஆயிரம் ரூபாய் அலவன்சாக வழங்கப்படுகிறது.
இது தவிர பயணத்தின் இடையே அவர்கள் மேற்கொள்ளும் செலவுகள் அவர்கள் தங்கும் விடுதி, உணவு உள்ளிட்ட அனைத்திற்குமான செலவுகளை கிரிக்கெட் வாரியம் ஏற்றுக் கொள்கிறது. பயணத்தின் முதல் தர வகுப்பு டிக்கெட்டுகள் மட்டுமே அவர்களுக்கு வழங்கப்படுகின்றன. இது தவிர அலுவலக ரீதியாக வெளிநாடு பயணங்கள் மேற்கொள்ளும் போது ஒருநாளுக்கு 40 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு கொடுக்கப்படுகிறது.
இது தவிர பயணம், உணவு, விடுதி ஆகியவற்றுக்கு தனிப்பட்ட தொகை செலுத்தப்படுகிறது. இது தவிர மீட்டிங், வேறு எந்த வேலைக்காகவும் ஒரு ஊரில் இருந்து இன்னொரு ஊருக்கு சென்றால் அவருக்கு தினசரி 30 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது. அவர் அங்கு ஹோட்டல் புக் செய்தால், அனைத்து செலவுகளையும் கிரிக்கெட் வாரியம் ஏற்றுக் கொள்கிறது.
இதையும் படிங்க:"அரசியல் அழுத்தம்.. இப்போது ஓய்வு இல்லை"- மனம் திறந்த வினேஷ் போகத்! - Vinesh Phogat Gold Medal