ஐதராபாத்: சச்சின் டெண்டுல்கரின் பள்ளித் தோழர், கிரிக்கெட் இணை, முன்னாள் இந்திய இடது கை பேட்டர் வினோத் காம்ப்ளி நடக்க முடியாமல் பிறர் உதவியுடன் கைத்தாங்கலாக அழைத்துச் செல்லப்படும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக, அதைப் பார்த்த ரசிகர்கள் பலரும் சச்சின் டெண்டுல்கர் நிச்சயம் உதவி புரிய வேண்டும் என்று பகிர்ந்து வருகின்றனர்.
வீடியோவில் வினோத் காம்ப்ளியால் நிற்கக் கூட முடியவில்லை. நடப்பது அசாத்தியமான நிலையில் மற்றவர்கள் உதவியுடன் கைத்தாங்கலாக அவர் அழைத்து செல்லப்பட்டது ரசிகர்களிடையேயும் கிரிக்கெட் வட்டாரங்களிலும் கடும் வேதனை அலைகளை ஏற்படுத்தி உள்ளது. வினோத் காம்ப்ளியால் பேலன்ஸ் செய்ய முடியாமல் கால்கள் பலமிழந்தது போல் காணப்படுகின்றன.
ஆனால் இந்த வீடியோவில் இருப்பதை நம்ப வேண்டாம் என தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த வினோத் காம்ப்ளி கூறியுள்ளார். கிரிக்கெட் உலகில் 1990-களில் சச்சின் டெண்டுல்கர் நுழைவையடுத்து வினோத் காம்ப்ளியின் நுழைவும் தூள் கிளப்புவதாக அமைந்தது. அதிரடி இடது கை வீரராக இரண்டு இரட்டைச் சதங்களை அவர் டெஸ்ட் போட்டிகளில் எடுத்தார். 1993-ல் இங்கிலாந்துக்கு எதிராக இந்தியாவின் வரலாற்று வெற்றியில் இவரது பெயர் உச்சம் பெற்றது.