முல்தான்:இங்கிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. இதில் பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பஞ்சாப் மாகாணத்தில் உள்ள முல்தான் நகரில் நடைபெற்று வருகிறது.
டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் ஷான் மசூத் பேட்டிங்கை தேர்வு செய்தார். பாகிஸ்தானின் இன்னிங்சை சையிம் அயூப், மற்றும் அப்துல்லா ஷபீக் ஆகியோர் தொடங்கினர். இதில் சையிம் அயூப் வெறும் 4 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அதன் பின் ஷபீக்குடன் கேப்டன் ஷான் மசூத் கைகோர்த்தார்.
இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சரிவில் இருந்து மீட்டனர். அபாரமாக விளையாடிய இருவரையும் இங்கிலாந்து பந்துவீச்சாளர்களால் எளிதில் வீழ்த்த முடியவில்லை. அபாரமாக விளையாடிய அப்துல்லா ஷபீக் (102 ரன்) சதம் விளாசிய கையோடு ஆட்டமிழந்தார்.
நீண்ட நாட்களுக்கு பின் ஷபீக் உள்ளூரில் சதம் விளாசி மீண்டும் பார்முக்கு திரும்பினார். சிறுது நேரத்தில் கேப்டன் ஷான் மசூத்தும் 151 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். இருவரும் அபாரமாக விளையாடி அணியை 260 ரன்களுக்கு மேல் கொண்டு சென்றனர். அடுத்து களமிறங்கிய பாபர் அசாம் (30 ரன்) இந்த முறையும் ஜொலிக்கவில்லை.