ஹைதராபாத்:18 ஆவது ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 22 ஆம் தேதி துவங்கவுள்ளது என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அதிகாரபூர்வமாக இன்று அறிவித்துள்ளது.
அன்றைய தினம், கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான கேகேஆர் அணியும், ஆர்சிபி அணியும் மோத உள்ளன. லீக் சுற்றுப் போட்டிகள் தொடங்கி இறுதிப் போட்டி வரை மொத்தம் 74 போட்டிகளை கொண்ட இத்தொடரின் இறுதி ஆட்டம் மே மாதம் 25 ஆம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிஎஸ்கே போட்டி:இந்தத் தொடரின் இரண்டாவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோத உள்ளன. இப்போட்டி மார்ச் 23 ஆம் தேதி பெறவுள்ளது. அதே நாளில், சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் இத்தொடரின் மூன்றாவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இத்தொடரில் வார இறுதி நாட்களில், ஒரு தினத்தில் இரண்டு போட்டிகள் என்ற கணக்கில் மொத்தம் 24 போட்டிகள் நடைபெறவுள்ளன.
இறுதிச் சுற்றுக்கு செல்வதற்கான முதல் தகுதிச் சுற்றுப் போட்டி (Qualifier 1) மே மாதம் 20 ஆம் தேதி, ஹைதராபாதில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்திலும், இரண்டாவது தகுதிச் சுற்றுப் போட்டி (Qualifier 2) கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் மே மாதம் 23 ஆம் தேதியும் நடைபெற உள்ளது. தகுதி நீக்க சுற்றுப் போட்டி (Eliminator) மே 21 ஆம் தேதி நடைபெறுகிறது.