பாரீஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரீசில் 17வது பாராலிம்பிக்ஸ் விளையாட்டு தொடர் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான நீச்சல் போட்டியில் பிரேசிலை சேர்ந்த இரண்டு கைகளையும் இழந்த வீரர் தங்கப் பதக்கம் வென்று உள்ளார். சாதாரணமாக நீச்சலுக்கு இரண்டு கைகளும் மிக முக்கியமானது.
ஆனால் பிரேசிலை சேர்ந்த கேப்ரியல் ஜெரால்டோ என்பவர் இரண்டு கைகளை இழந்த போது நம்பிக்கையை தளரவிடாமல் ஆடவருக்கான நீச்சல் போட்டியில் தங்கம் வென்று அசத்தி உள்ளார். இரண்டு கைகளையும் இழந்த கேப்ரியல் தனது மார்பு மற்றும் இரண்டு கால்களை கொண்டு நீந்தி இந்த சாதனையை படைத்துள்ளார்.
ஆடவருக்கான எஸ்2 பிரிவில் 200 மீட்டர் ப்ரீஸ்டைல் போட்டியில் கேப்ரியல் பந்தைய தூரத்தை 3:58:92 விநாடிகளில் கடந்து தங்கப் பதக்கம் வென்றார். நடப்பு பாரீஸ் பாராலிம்பிக்ஸ் விளையாட்டு போட்டியில் இது அவருக்கு மூன்றாவது பதக்கம் ஆகும். இதற்கு முன் 100 மீட்டர் பேக்ஸ்ட்ரோக் மற்றும் 50 மீட்டர் பேக்ஸ்ட்ரோக் ஆகிய போட்டிகளிலும் கேப்ரியல் பதக்கங்களை வென்று குவித்து உள்ளார்.
அதேநேரம் கடந்த 2020 டோக்கியோ பாராலிம்பிக்ஸ் போட்டியில் இரண்டு தங்கம் உள்பட மூன்று பதக்கங்களை கேப்ரியல் வென்றுள்ளார். ஆக மொத்தம் பாராலிம்பிக்ஸ் விளையாட்டில் கேப்ரில் 3 தங்கப் பதக்கங்களை கைப்பற்றி வரலாறு படைத்துள்ளார். 200 மீட்டர் ப்ரீஸ்டைல் பிரிவில் பொது வீரர் விளாடிமர் டெனிலென்கோ மற்றும் சிலி நாட்டின் அல்பெர்டோ டைஸ் ஆகியோர் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றனர்.
த்ங்கம் வென்றது குறித்து பேசிய கேப்ரியல், "பதக்கம் வென்றது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நான் என்னை ஒரு ராக்கெட் மனிதர் போல் உணர்கிறேன். ராக்கெட் ஒருபோதும் பின்னோக்கி செல்லாது. எப்போது முன்னோக்கியே சென்று கொண்டு இருக்கும். அதேபோல் ராக்கெட்டுக்கும் இரண்டு கைகள் கிடையாது எனக்கும் கிடையாது" என்று நெகிழ்ச்சியாக கூறினார்.
பாராலிம்பிக்ஸ் விளையாட்டில் இரண்டு கைகளையும் இழந்து விளையாடுவோரின் எண்ணிக்கை மிக மிக குறைவு. முன்னதாக இந்திய வீராங்கனை ஷீத்தல், இரண்டு கைகள் இல்லாத போதும் கலப்பு இரட்டையர் வில்வித்தை போட்டியில் வெண்கலம் வென்று சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:"பேட் பிடித்து விளையாடிராதவர் ஐசிசியின் தலைவர்"- ஜெய்ஷா குறித்து ராகுல் விமர்சனம்! - Rahul Gandhi on Jeyshah