தூத்துக்குடி: உலகப் புகழ்பெற்ற குலசேகரன் பட்டணம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா அக்டோபர் 3ஆம் தேதி துவங்குகிறது. முன்னதாக, அக்டோபர் 2ஆம் தேதி பகல் 11 மணிக்கு காளி பூஜையும், நண்பகல் 12 மணிக்கு அன்னதானம், மாலை 5 மணிக்கு சகஸ்ரநாம அர்ச்சனை, புஷ்பாஞ்சலி, இரவு 9 மணிக்கு அம்மன் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.
அக்டோபர் 3ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு யானையில் கொடி பட்டம் ஊர்வலம், காலை 6 மணி, நண்பகல் 1 மணி, பகல் 3 மணி, மாலை 5.30 மணி, இரவு 7.29 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், காலை 9.30 மணிக்கு வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றமும் நடைபெற உள்ளது.
அம்மன் வீதி உலா;கொடியேற்றம் நடந்த உடன் கோவில் பூசாரி பக்தர்களுக்கு, காப்பு வேடம் அணியும் பக்தர்கள் காணிக்கை பிரிக்க துவங்குவார்கள். இரவு 10 மணிக்கு அன்னை முத்தாரம்மன் சிம்மவாகனத்தில் துர்க்கை கோலத்தில் வீதி உலா நடைபெற உள்ளது. தினசரி இரவு 10 மணிக்கு இரண்டாம் திருநாளில் அன்னை கற்பக விருட்ச வாகனத்தில் விசுவக மேசுவரர் திருக்கோலம், மூன்றாம் நாள் திருவிழாவில் ரிஷப வாகனத்தில் பார்வதி திருக்கோலம் என ஒவ்வொரு நாளும் அன்னை திருவீதி உலா நடைபெற உள்ளது.
இதையும் படிங்க:தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் உறுதி.. உதயநிதி துணை முதல்வர்? மு.க.ஸ்டாலின் பதில்!
மகிஷா சூரசம்ஹாரம்;மிக முக்கிய நிகழ்ச்சியான மகிஷாசூர சம்ஹாரம் அக்டோபர் 12ஆம் தேதி நடைபெற உள்ளது. அன்று பத்தாம் திருநாளை முன்னிட்டு காலை 6 மணி, 7.29 மணி, காலை 9 மணி, காலை 10.30 மணிக்கு மகா அபிஷேகமும், இரவு 11 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையும், நள்ளிரவு 12 மணிக்கு அன்னை முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்ப ரேஸ்வரர் கோயில் முன் எழுந்தருளி லட்சக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் சம்காரம் நடக்கிறது.
அக்டோபர் 13ஆம் தேதி அதிகாலை ஒரு மணிக்கு கடற்கரை மேடையில் அம்மனுக்கு அபிஷேகம், அதிகாலை 2 மணிக்கு சிதம்பரேஸ்வரர் திருக்கோயில் அம்மனுக்கு சாந்தாபிஷேக ஆராதனையும், தொடர்ந்து தேரில் எழுந்தருளி கோவில் கலையரங்கம் வந்தடைந்ததும் காலை 5 மணிக்கு அபிஷேக ஆராதனையும், காலை 6 மணிக்கு அன்னை பூஞ் சப்பரத்தில் தெரு பவனியும், நண்பகல் 12 மணிக்கு அன்னதானமும், மாலை 4 மணிக்கு அம்மன் கோயில் வந்து சேர்ந்தவுடன் கொடி இறக்கப்பட்டு மாலை 4.30 மணிக்கு காப்பு கலைதல் நடைபெறும்.
நள்ளிரவு 12 மணிக்கு சேர்க்கை அபிஷேகம் நடக்கிறது. அக்டோபர் 14ஆம் தேதி காலை 6 மணி, காலை 8 மணி, 10.00 மணிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனையும், மதியம் 12 மணிக்கு கோவில் அறங்காவலர் குழு தலைவர் கண்ணன் ஏற்பாட்டில் சிறப்பு பாலாபிஷேகம், புஷ்ப அலங்காரம் நடைபெற உள்ளது.
ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் கண்ணன், உதவி ஆணையர் செல்வி, இணை ஆணையர் அன்புமணி, செயல் அலுவலர் ராமசுப்பிரமணியன், ஆய்வர் பகவதி, அரங்காவலர்கள் ரவீந்திரன், குமரன், மகாராஜன், கணேசன், வெங்கடேஸ்வரி ஆகியோர் செய்து வருகின்றனர்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்