மதுரை:ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு உகந்ததாக கருதப்படுகிறது. மேலும், அந்த மாதத்தில் வரக்கூடிய ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், ஆடி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை இன்று மதுரையில் உள்ள பல்வேறு பெண் தெய்வ ஆன்மீக ஸ்தலங்களில் பக்தர்கள் திரளாக வழிபட்டு வருகின்றனர்.
மதுரை வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம் கோயிலில் பக்தர்கள் தரிசனம் (Credits - ETV Bharat Tamil Nadu) இந்த நிலையில், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் உபய கோயிலான அருள்மிகு மாரியம்மன் கோயிலில் சர்வ அலங்காரத்தில் மாரியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய அம்மனை நீண்ட வரிசையில் அதிகாலை முதலே காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். மேலும், பெண்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றிய அம்மனுக்கு நன்றி தெரிவிக்கும் வண்ணம் கோயில் பிரகாரத்தில் அங்கப்பிரதட்சணம் செய்தும், நெய்விளக்கு, மாவிளக்கு உள்ளிட்டவற்றை படைத்தும் அம்மனை மனம் உருக வேண்டினர்.
அதேபோல், கோயில் வளாகத்தில் இருக்கக்கூடிய நாகம்மா சிலைக்கு பக்தர்கள் பாலபிஷேகம் செய்து மஞ்சள், குங்குமம் உள்ளிட்டவைகளை படைத்து வணங்கினர். அதுமட்டுமின்றி, பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றும் வண்ணம் விறகு அடுப்பில் பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்தும், பக்தர்களுக்கும் வழங்கினர்.
மேலும், மதுரையின் மையப்பகுதியாக இருக்கக்கூடிய இந்த மாரியம்மன் கோயிலில் ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு, மதுரை மட்டுமல்லாது, சுற்று வட்டாரங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அப்படி சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு அம்மனின் பிரசாதமாக கோயில் நிர்வாகம் சார்பாக கேழ்வரகு வழங்கப்பட்டது.
இதையும் படிங்க: ஒகேனக்கலில் கரைபுரண்டு ஓடும் காவிரி தாயின் அழகிய ட்ரோன் காட்சி!