வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்காளர்களின் மனநிலையை சீர்குலைக்கும் விதத்தில் ரஷ்யா மற்றும் ஈரான் திட்டமிட்டு பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றன என்று அமெரிக்கா பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளது.
ஒட்டுமொத்த உலகமே ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் அமெரிக்க அதிபர் பொதுத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் முன்னாள் அதிபரும், குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளருமான டொனால்ட் ட்ரம்புக்கும், அமெரிக்க துணை அதிபரும், ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளருமான கமலா ஹாரீஸுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இப்போட்டியில் வெல்லப் போவது யார்? உலகின் மிகப்பெரிய வல்லரசு நாட்டின் அடுத்த அதிபர் யார்? என்ற கேள்விகளுக்கான விடை விரைவில் தெரிந்துவிடும்.
இந்த நிலையில், இன்று நடைபெறும் தேர்தலில் வாக்காளர்களின் மனநிலையை சீர்குலைக்கும் நோக்கில் ரஷ்யா, ஈரான் ஆகிய நாடுகள் திட்டமிட்டு பொய் பிரசாரங்களை செய்து வருவதாக அமெரிக்க அரசு முகமைகள் மற்றும் தேர்தல் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வரும் முகமைகள் கூட்டாக குற்றம்சாட்டி உள்ளன.