கொழும்பு: இலங்கையின் 9வது அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை நடைபெற்றது. இலங்கையின் 22 தேர்தல் மாவட்டங்களில் உள்ள 13 ஆயிரத்து 400க்கும் அதிகமான வாக்குச்சாவடிகளில் நடைபெற்ற வாக்குப்பதிவிற்குப் பிறகு, வாக்குப்பெட்டிகள் வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு வரப்பட்டன. இதனையடுத்து, மாலை 6 மணியளவில் வாக்கு எண்ணும் பணி தொடங்கியது.
இதில் முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. இதன் முடிவில் தேசிய மக்கள் கட்சியின் தலைவர் அனுரா குமாரா திசநாயகே மொத்தமுள்ள 22 தேர்தல் மாவட்டங்களில் 21 மாவட்டங்களில் அவரது வெற்றி முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையின் தற்போதைய நிலவரப்படி, 24 லட்சத்து 59 ஆயிரத்து 993 வாக்குகள் பெற்று 39.44 வாக்கு சதவீதத்துடன் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார். இதனால் அனுரா குமாரா திசநாயகேவின் வெற்றி கிட்டத்தட்ட உறுதி செய்யபட்டுள்ளது.
இருப்பினும், இதற்கு அடுத்ததாக சமாகி ஜனா பலாவேகயா கட்சியின் சஜித் பிரேமதசா 21 லட்சத்து 24 ஆயிரத்து 298 வாக்குகள் உடன் 34.06 சதவீத வாக்குகள் பெற்று கடும் போட்டியை ஏற்படுத்தி உள்ளார். இவர்களது வாக்கு சதவீத வித்தியாசம் 5.38 ஆக உள்ளது. மேலும், ரணில் விக்கிரமசிங்கே 10 லட்சத்து 94 ஆயிரத்து 426 வாக்குகள் பெற்று, 17.55 சதவீத வாக்குகளுடன் உள்ளார்.