எட்மண்டன் (கனடா): கனடாவில் உள்ள பல்வேறு பகுதிகளில் இந்து சமுக மக்களுக்கு தொடர்புடைய பகுதிகள் சேதப்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, எட்மண்டன் பகுதியில் உள்ள பாப்ஸ் சுவாமி நாராயணன் கோயில் (BAPS Swaminarayan Mandir) சேதப்படுத்தப்பட்டுள்ளது.
இச்சம்பவத்திற்கு நேப்பியன் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரா ஆர்யா நாடு முழுவதும் வசிக்கும் இந்து சமுக மக்கள் மீது வெறுப்பு பரப்பப்பட்டு வருவதாக வருத்தம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவரது 'X' சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அதில், “எட்மண்டன் பகுதியில் உள்ள பாப்ஸ் சுவாமி நாராயண் கோயில் மீண்டும் சேதப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் கனடாவின் டொராண்டோ, பிரிட்டிஷ் கொலம்பியா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள இந்து கோயில் வெறுக்கத்தக்க கிராஃபிட்டிகளைக் (graffiti) கொண்டு சேதப்படுத்தப்படுகிறது.
மேலும், நீதிக்கான சீக்கியர்களைச் சேர்ந்த குர்பத்வந்த் சிங் பன்னூன் இந்துக்கள் இந்தியாவுக்கு திரும்பிச் செல்லுமாறு கடந்த ஆண்டு பகிரங்கமாக அறிவித்தார். அதேபோல், காலிஸ்தான் ஆதரவாளர்கள் முன்னாள் இந்திய பிரதமர் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டதை பகிரங்கமாக கொண்டாடினர்.
நான் எப்பொழுதும் சொல்வது போல், காலிஸ்தான் பயங்கரவாதிகள் வெறுப்பு மற்றும் வன்முறையை தூண்டும் வார்த்தைகளை எளிதில் பொது வெளியில் பயன்படுத்துகின்றனர். ஆனால், கனடா-இந்துக்கள் சட்டத்தின் மீது அக்கறை கொண்டவர்கள் என்பதை நான் மீண்டும் பதிவு செய்கிறேன்.