பெஷாவர் : பாகிஸ்தானில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. கொட்டித் தீர்த்த கனமழையால் வடமேற்கு மாகாணமான கைபர் பக்துன்கவா கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. ஆப்கானிஸ்தானின் எல்லையோரமாக அமைந்து உள்ள கைபர் பக்துன்கவா மாகாணத்தில் கனமழையால் பெருவெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
மேலும், பஜூர், ஸ்வாட், லோயர் திர், மலகாண்ட், கைபர், பெஷாவர், வடக்கு மற்றும் தெற்கு வஜிரிஸ்தான் மற்றும் லக்கி மார்வாட் ஆகிய நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. பெருவெள்ளத்தால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வீடுகள் இடிந்து விழுந்த கோர சம்பவத்தில் ஏறத்தாழ 37 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதில் 27 பேர் மழை தொடர்பான பேரிடரில் சிக்கி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதில் குறிப்பாக பெரும்பாலானோர் குழந்தைகள் எனக் கூறப்பட்டு உள்ளது. கனமழை பெருவெள்ளத்தில் சிக்கிய மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும், பாதிப்பிக்குள்ளான மக்களுக்கு போதிய நிவாரணம் வழங்கப்படும் என கைபர் பக்துன்கவா மாகாண முதலமைச்சர் அலி அமீன் கந்தாபூர் தெரிவித்து உள்ளார்.
அதேபோல் தென்மேற்கு பலுசிஸ்தான் மாகாணத்திலும் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. அங்கும் இயற்கை பேரிடர்களில் சிக்கி ஏறத்தாழ 5 பேர் வரை உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் பாதுகாப்பு ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியும் இயற்கை பேரிடரால் துவண்டு போய் இருப்பதாக கூறப்படுகிறது.
இயற்கை பேரிடர்களில் சிக்கிக் கொண்டவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு உள்ளதாகவும், பல்வேறு பகுதிகளில் சாலை கடும் சேதமாகி உள்ளதால் மீட்பு பணியில் சிறிது தொய்வு ஏற்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கனமழை பெருவெள்ளத்தால் சில இடங்களில் சாலை முற்றிலும் துண்டிக்கப்பட்டு தனித் தீவுகள் போல் மாறியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பாகிஸ்தானில் பருவமழை பொய்த்து போன நிலையில், தற்போது வெளுத்து வாங்கி வருவதாக கூறப்படுகிறது. ஆண்டுதோறும் கொட்டித் தீர்க்கும் பருவமழையால் பாகிஸ்தான் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டு வருகிறது. கடந்த 2022ஆம் ஆண்டு கனமழையால் ஏறத்தாழ ஆயிரத்து 800 பேர் பாகிஸ்தானில் உயிரிழந்தனர்.
இதையும் படிங்க :பாகிஸ்தான் பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் தேர்வு! 2வது முறை பிரதமராக பதவியேற்பு!