பெர்லின்: ஜெர்மனியில் அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் கிறிஸ்தவ ஜனநாய கட்சி அதிக இடங்களைக் கைப்பற்றியது. பிரதமராக மெர்ஸ் பதவி ஏற்க உள்ளார்.
சட்டவிரோத குடியேற்றங்களுக்கு எதிரான நடவடிக்கை, பெருநிறுவனங்களுக்கு ஆதரவு என்ற கொள்கையுடன் ஐரோப்பாவின் மிகப்பெரிய பொருளாதாரநாடுகளில் ஒன்றான ஜெர்மனியின் பிரதமராக பிரீட்ரிக் மெர்ஸ் பதவி ஏற்க உள்ளார். இவர், கிறிஸ்தவ ஜனநாயக கட்சியின் தலைவர்களில் ஒருவரும் முன்னாள் பிரதமருமான ஏஞ்சலா மெர்கலின் எதிர்ப்பாளர்களில் ஒருவராவார். ஏஞ்சலா மெர்கல் ஆட்சியில் சட்டவிரோத குடியேற்றங்கள் அதிக அளவு நடந்ததாக மெர்ஸ் குற்றம் சாட்டியுள்ளார். 69 வயதான மெர்ஸ், பிளாக் ராக் என்ற முதலீடு நிதி நிறுவனம்,பல்வேறு பெருநிறுவனங்களின் நிர்வாகத்தில் அங்கம் வகித்தவர் என்ற வகையில் வலுவான வணிகப் பிண்ணனி கொண்டவர். இதுவரை அவர் அரசு ரீதியிலான எந்த பதவியும் வகித்ததில்லை.
தற்போதைய பிரதமர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் தலைமையிலான கூட்டணிக்கு எதிராக எதிர்க்கட்சி கூட்டணியில் மெர்ஸ் பிரதமர் வேட்பாளராக களம் இறங்கினார். தேர்தல் பிரசாரத்தின் போது பொருளாதாரத்தை மீட்டெடுப்பது, சர்வதேச அளவில் ஜெர்மனியை மீண்டும் கட்டமைப்பது என்ற கோஷத்தை முன் வைத்திருந்தார்.