சென்னை:18 வயதிற்குட்பட்ட இளம் பெண்கள் கர்ப்பமடைவதால் பிரசவத்தின் போது குறைப்பிரசவம், எடை குறைவான குழந்தைகள் பிறப்பது, அதிக ரத்தப்போக்கு, நஞ்சுக்கொடி வெளியே வர முடியாதது, உயர் இரத்த அழுத்தம் போன்ற சிக்கல்கள் ஏற்படும் எனவும், வளர் இளம் பெண்கள் குழந்தைகளாக இருக்கும் போது மனதளவிலும் வளர்ச்சி அடையாமல் இருப்பதால், குழந்தைகளைப் பராமரிப்பது சிரமமாக இருக்கும் எனவும் எழும்பூர் தாய் - சேய் நல மருத்துவமனை இயக்குனர் கலைவாணி தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் 18 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள், மாதந்தோறும் 800க்கும் மேற்பட்டவர்கள் கர்ப்பம் அடைகின்றனர் என தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் மூலம் தகவல் வெளியானது. அதற்கு குழந்தைகள் உரிமை ஆர்வலர்கள் எதிர்ப்பும், 18 வயதிற்கும் கீழ் உள்ள பெண்கள் கர்ப்பம் அடைந்தாலும் பாலியல் குற்றம் நடைபெற்றதாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
இந்த நிலையில், 18 வயதிற்குட்பட்ட பெண்கள் கர்ப்பம் அடைந்தால் குழந்தை பெறும் போது ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், அவர்கள் உடலில் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் எழும்பூர் தாய் - சேய் நல மருத்துவமனை இயக்குனர் கலைவாணி ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு சிறப்புப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
குழந்தை பெறும் போது ஏற்படும் பாதிப்புகள்:“இளம் வயதில் கர்ப்பப்பை முழு வளர்ச்சி அடைந்திருக்காது. அந்த தருணத்தில் கர்ப்பம் தரிப்பதால் குறைப்பிரசவம் ஏற்படவும் வாய்ப்புகள் அதிகம். இந்த பருவத்தில் கருத்தரிப்புக்கான ஹார்மோன்கள் உற்பத்தியாகி உடலில் மாற்றங்கள் நடைபெறத் தொடங்கினாலும், கர்ப்பப்பை பக்குவமடைந்திருக்காது.
அந்த நிலையில் கர்ப்பமடையும் போது கர்ப்பப்பையில் இருக்கும் நஞ்சுக்கொடி (Placenta) அந்தப் பகுதியில் ஒழுங்காக ஒட்டாமல் இருக்கும். அதனால் பனிக்குடத்தில் போதுமான அளவு நீர் இருக்காது. அத்துடன் கர்ப்பப்பை சுருங்கி, சுருங்கி விரியும் தன்மையையும் இழந்துவிடும்.
இதனால் கருவுற்றிருக்கும் போதும், குழந்தை பிறந்த பிறகும், தாய்க்கு அதிக ரத்தப்போக்கு ஏற்படும். பிரசவத்தின் போது நஞ்சுக்கொடி வெளியே வரமுடியாத நிலை கூட ஏற்பட்டு, தாய் உயிரிழக்க நேரும். தாயின் இடுப்பெலும்பின் வழியே குழந்தையின் தலை வெளியே வருவதில் சிக்கல் ஏற்படும்.
இதனால் பெரும்பாலும் அறுவை சிகிச்சை செய்தே குழந்தையை வெளியே எடுக்க வேண்டியிருக்கும். இந்த இடர்பாடுகளால் தாய் மற்றும் குழந்தையின் இறப்பு விகிதங்கள் அதிகரிக்கின்றன.
வளர் இளம் பருவத்தில் கர்ப்பம் அடைந்தால் பெண்கள் உடலில் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்? வளர் இளம் பருவத்தில் பெண்களின் உடலில் நிகழும் பல்வேறு ஹார்மோன் மாற்றங்களால் உளவியல் ரீதியாக பெண்கள் பாதிப்படைந்திருப்பர். இந்த பருவத்தில் பெண்களுக்கு கூச்ச சுபாவமும், தாழ்வு மனப்பான்மையும் அதிகமாகவே இருக்கும். திருமணம், குழந்தைப்பேறு போன்ற அழுத்தங்களை அவர்கள் எதிர்கொள்ளும்போது மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிப்புக்குள்ளாவர்.