இன்றைய காலத்தில் வயது வித்தியாசமின்றி பலர் எதிர்கொள்ளும் பிரச்சனைகளில் ஒன்று அதிக எடை. குறிப்பாக மாறிய வாழ்க்கை முறை, உணவுப் பழக்கம், உடல் உழைப்பு இல்லாமை, மன அழுத்தம், தூக்கமின்மை, அலுவலகங்களில் நீண்ட நேரம் அமர்ந்து பணி புரிவது போன்றவை எடை அதிகரிப்புக்கு முக்கிய காரணியாக இருக்கிறது.
இந்நிலையில், எடையை குறைக்க பலரும் டயட் மற்றும் உடற்பயிற்சியை பின்பற்றுகின்றனர். ஆனால், இவை மட்டும் எடையை குறைக்காது என்றும் நாம் சாப்பிடும் உணவில் சிலவற்றை ஒன்றாக சாப்பிடுவதை தவிர்த்தால் தான் எடை குறையும் என்கிறார் பிரபல ஊட்டச்சத்து நிபுணர் லஹரி சுரபனேனி. அந்த உணவுகள் என்னென்ன? என்பதை பார்க்கலாம்..
ஓட்ஸ் மற்றும் ட்ரை ஃப்ரூட்ஸ்: உடல் எடையை குறைக்க நினைப்பவர்களில் பெரும்பாலானோர் காலை உணவாக ஓட்ஸை தொடர்ந்து சாப்பிடுவார்கள். இதற்கு காரணம், ஓட்ஸில் சர்க்கரை அளவு குறைவாக இருப்பது தான். இருப்பினும், சிலர் ஓட்ஸுடன் உலர் பழங்களை ஒன்றாக எடுத்துக்கொள்கிறார்கள்.
புரதம் அதிகளவில் இருப்பதால், இரண்டையை ஒன்றாக சாப்பிடுகிறார்கள். ஆனால், இவற்றை ஒன்றாக உட்கொள்வதால் உடல் எடை குறைக்கும் வாய்ப்பு குறைந்து, எடை அதிகரிக்க வழிவகுக்கிறது. மேலும், உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இரண்டையும் ஒன்றாக எடுத்துக்கொள்வதை தவிர்க்க வேண்டும் என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர்.
சாதம் மற்றும் உருளைக்கிழங்கு:உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் சாப்பிடக்கூடாத மற்றொரு உணவுக் கலவை இது. காரணம், உருளைக்கிழங்கில் மாவுச்சத்து அதிகம் உள்ளது. எனவே இவற்றை சாதத்துடன் சேர்த்து சாப்பிடும்போது உடல் எடை கூடும் வாய்ப்பு உள்ளது. அதனால் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இந்த இரண்டையும் சேர்த்து சாப்பிடக் கூடாது. இவற்றை தனித்தனியாக சிறிய அளவில் எடுத்துக் கொள்ளும்போது ஆரோக்கியத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை என்று பரிந்துரைக்கப்படுகிறது.
ஸ்நாக்ஸ் மற்றும் பானங்கள்: பலருக்கும் குளிர்பானங்கள் குடிக்கும் பழக்கம் உள்ளது. ஆனால், இவற்றில் உள்ள கெட்ட கொழுப்பு மற்றும் அதிக சர்க்கரை அளவு உடல் எடையை அதிகரித்து அஜீரண பிரச்சனைகளை உண்டாக்குகின்றன. இந்த நிலையில், குளிர் பானங்களுடன் எண்ணெயில் பொரித்த ஸ்நாக்ஸ் சாப்பிடும் போது எடை அதிகரிக்கும். அதனால் தான் உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் இந்த கலவையிலிருந்து விலகி இருப்பது நல்லது.