இயற்கையின் நற்குணங்கள் நிறைந்த சுரைக்காய் பெரும்பாலானோர் விரும்பாத காய்கறிகளில் ஒன்றாகவும் பலரது உணவுப் பட்டியலில் அரிதாகவும் காணப்படுகிறது. ஆனால், நமது உணவில் இந்த காய்கறியை சேர்ப்பது உடலுக்கு என்னற்ற நன்மைகளை தருவதாக பல ஆய்வுகளின் முடிவில் தெரியவந்துள்ளது. அவை என்னென்ன என்பதை பார்க்கலாம் வாங்க..
உடலை நீரேற்றமாக வைக்கிறது: சுரைக்காய் நீர்ச்சத்து அதிகம் கொண்ட காய்களில் ஒன்றாகும். இதில் கிட்டத்தட்ட 92% நீர்ச்சத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கோடைக் காலத்தில் சுரைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்வதன் மூலம், உடலில் ஏற்படும் நீர்ச்சத்து குறைபாடை தடுக்கிறது. மேலும், உடலில் வெப்பம் உயர்வதால் ஏற்படும் அசெளகரியத்தையும் குறைக்கிறது.
சிறந்த செரிமானம்: நார்ச்சத்துகளால் நிறைந்துள்ள சுரைக்காய், செரிமானத்திற்கு உதவியாக இருந்து மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை தடுக்கிறது. சுரைக்காயில் உள்ள நீர் உள்ளடக்கம் உடலில் உள்ள நச்சுத்தன்மை மற்றும் வெப்பத்தை குறைக்க உதவுகிறது. மேலும், இது உடல் ஆரோக்கியத்தை பராமரிக்கவும் இரத்தத்தை சுத்தப்படுத்தவும் உதவுகிறது.
தோல் மற்றும் முடி ஆரோக்கியம்: சுரைக்காயில் உள்ள நீர்ச்சத்து, பீனாலிக் பண்பு, வைட்டமின்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் தோல் மற்றும் முடி பராமரிப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. இரத்த சுத்திகரிப்பு மற்றும் உடலில் உள்ள நச்சுக்களை அகற்றுவதன் மூலம் சுரைக்காய் இயற்கையான நச்சு நீக்கியாக செயல்படுகிறது. முடி வளர்ச்சியை மேம்படுத்துவதோடு, சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி பொலிவாக வைக்க உதவுகிறது.
எடை இழப்பு: உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு சுரைக்காய் சிறந்த பலனை கொடுக்கிறது. இதிலுள்ள நார்ச்சத்து மற்றும் குறைந்த கலோரி உள்ளடக்கம் வயிறு நிரம்பிய உணர்வை கொடுத்து எடை இழப்பிற்கு உதவுகிறது. உணவில் சுரைக்காய் சேர்த்துக்கொள்வது பசியை குறைப்பதன் மூலம் அதிகமாக சாப்பிடுவதை தடுத்து எடையை குறைக்க உதவுகிறது.