சென்னை:செரிமானத்தில் கோளாறு உண்டாகும் போது அல்லது அமிலங்கள் அதிகளவு உடம்பில் சுரக்கும்போது காற்று அதிகமாக உடலில் உருவாகி வாயுத் தொல்லையாக உருவெடுக்கிறது. மருத்துவக் காரணங்களால் வாயுத் தொல்லை ஏற்படுகிறதென்றாலும், நாம் உட்கொள்ளும் உணவே வாயுத்தொல்லைக்கு முக்கிய காரணியாக அமைகிறது.
பழங்களில் உள்ள பிரக்டோஸை அதிகமாக உட்கொண்டால் வாயுத்தொல்லை அதிகமாகும் என அமெரிக்காவின் NIH மருத்துவ பத்திரிகை தகவல் வெளியிட்டுள்ளது. அடிக்கடி சூயிங் கம் மெல்லுவது, குளிர்பானம் குடிப்பது, அதிலும் குறிப்பாக, ஸ்ட்ரா பயன்படுத்தி பானங்கள் அருந்துவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். அவசர அவசரமாக உணவு அருந்தாமல், அமர்ந்து உணவு உட்கொள்வது.
மொத்தமாக ஒரே நேரத்தில் உணவு உட்கொள்வதை தவிர்த்து, அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிடுவது வாயுத் தொல்லைகளை நீக்க உதவுகிறது. குறிப்பாக, கார்போஹைட்ரேட் உணவுப் பொருட்களை அதிகமாக சாப்பிடுவதால் எளிதில் செரிமானம் நடைபெறாமல் சிலருக்கு வாயுத் தொல்லை பிரச்னை அதிகமாக காணப்படுகிறது. இந்த கார்போஹைட்ரேட் உணவுப் பொருட்கள் பெரிய குடலை அடையும் போது, பாக்டீரியாக்கள் அவற்றை உடைத்து, வாயுவை உருவாக்குகின்றன.
வாயுத் தொல்லை தரும் உணவுகள்:ஆப்பிள், பேரிக்காய், காலிஃபிளவர், ப்ரக்கோலி, பட்டானி, பீன்ஸ், பருப்பு வகைகள், பால், ஐஸ்கீரிம்,தயிர்,கோதுமை. அதிகபடியாக பிரக்டோஸ் (fructose) உள்ளடக்கிய பழச்சாறுகள், குளிர்பாணங்கள் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. சிலர் அதிக நார்ச்சத்து (Fiber rich foods) உட்கொள்ளும் போது அதிக வாயு அறிகுறிகளை அனுபவிக்கிறார்கள். அதிக கொழுப்புள்ள உணவுகளை உண்ணும் போது மற்றவர்களுக்கு அதிக வாயு அறிகுறிகள் ஏற்படுகிறது.