சென்னை:தமிழ் சினிமாவில் வெற்றி இயக்குநராக வலம் வருபவர் லிங்குசாமி. இவரது படைப்பில் ரன், பையா, சண்டக்கோழி ஆகிய படங்கள் வியாபார ரீதியாக வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து, தனது சகோதரர் உடன் இணைந்து 'திருப்பதி பிரதர்ஸ்' என்ற தயாரிப்பு நிறுவனம் தொடங்கி, பல்வேறு படங்களை தயாரித்து வருகிறார். 2006-ல் தொடங்கிய இந்த நிறுவனம் மூலம் பையா, வழக்கு எண் 18/9, தீபாவளி, கோலிசோடா, கும்கி, உத்தம வில்லன் உள்ளிட்ட படங்களை தயாரித்து உள்ளனர்.
உத்தம வில்லன் பிரச்சினை:'திருப்பதி பிரதர்ஸ்' தயாரிப்பில், கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான 'உத்தமவில்லன் திரைப்படம்' மிகப்பெரிய தோல்விப் படங்களில் ஒன்றாக மாறியது. இதனால் மிகப்பெரிய பொருளாதார சிக்கலில் சிக்கினார் லிங்குசாமி.
இப்படத்தின் பிரச்சினை குறித்து பேட்டி ஒன்றில் இயக்குநர் லிங்குசாமி கூறியதாவது, "உத்தம வில்லன் எங்களுக்கு மிகப்பெரிய பொருளாதாரச் சிக்கலை கொடுத்தது. குறை சொல்லவில்லை, நிஜம் அதுதான். அதற்காக வேறு ஒரு படம் பண்ணித் தருவதாக கமல்ஹாசன் எழுதிக் கொடுத்துள்ளார்.
ரூ.30 கோடிக்கு பண்ணி த்தருவதாக சொன்னார். நாங்கள் எந்தவித அழுத்தமும் கொடுக்கவில்லை. அவர்மீது உள்ள மரியாதையில் அடிக்கடி சென்று கேட்டோம். விரும்பிதான் சென்றோம். ஆனால் நாங்கள் கேட்டது வேறு. தேவர் மகன் மாதிரி ஒரு படம் கேட்டோம்.
ஒரு அருமையான கதை சொன்னார். ஆனால், வாரம் ஒருமுறை அதை மாற்றினார். அவருடைய சிக்கல் அது. எனது சகோதரர் 'போஸ் த்ரிஷ்யம்' ரீமேக் பண்ணலாம் என்றார். ஆனால், கமல் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை, அதன்பிறகு உத்தம வில்லன் பண்ணலாம் என்றார். ஆனால் எங்களுக்கு அது பிடிக்கவில்லை.
ஒரு கலைஞனாக கமல் போன்று யாரையும் பார்க்க முடியாது. உத்தம வில்லன் எனது கனவுப் படமாக பண்ணித் தருகிறேன். பின்னர் எந்த பிரச்னை வந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் என்றார். படம் முடிந்த பிறகு மாற்றங்கள் செய்யச்சொல்லி ஒரு பட்டியல் எடுத்துச் சென்றோம். சரி செய்கிறேன் என்றார். ஆனால் செய்யவில்லை. மேலும், என்னை நம்புங்கள், அப்படியே விடுங்கள் என்று சொன்னார் கமல்" என்று லிங்குசாமி பேசியிருந்தார்.