சென்னை:இசைஞானி இளையராஜா நெல்லையில் நடத்திய இசை நிகழ்ச்சி மிகுந்த வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து உற்சாகத்துடன் புதிய அறிவிப்பு ஒன்றை இளையராஜா வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவின் தன்னிகரற்ற இசையமைப்பாளராக திகழ்ந்து வரும் இசைஞானி இளையராஜா தற்போதும் சிறிய பட்ஜெட் பெரிய பட்ஜெட் படம் என பாரபட்சம் பார்க்காமல் அனைத்து படங்களுக்கும் இசையமைத்து வருகிறார்.
சமீபத்தில் அவரது இசையில் வெற்றிமாறனின் ’விடுதலை பாகம் 2’, மற்றும் ’ஜமா’ ஆகிய படங்கள் வெளியாகின. அந்த படங்களில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் ரசிகர்களால் பரவலாக ரசிக்கப்பட்டு வருகிறது. வயது முதிர்ந்த போதிலும் இளையராஜா என்றும் மாறாத சுறுசுறுப்புடன் திரைப்படங்களுக்கு இசையமைப்பதை தவிர்த்து வெளிநாடுகளிலும், தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களிலும் இசை கச்சேரி நடத்தி வருகிறார் இளையராஜா.
கடந்த வருடம் கும்பகோணத்தில் இசைக் கச்சேரியை நடத்திய இளையராஜா, அதில் கலந்து கொண்டு ஆதரவளித்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தோடு மட்டுமில்லாமல் அப்போது தலைநகரில் மட்டும் அல்லாமல் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து ஊர்களில் அவரின் இசை பயணம் தொடரும் என குறிப்பிட்டிருந்தார். அந்த வகையில் ஜனவரி 17ஆம் தேதி வெள்ளிக்கிழமை திருநெல்வேலியில் மதுரை - கன்னியாகுமரி நான்கு வழிச்சாலையில் ரெட்டியார்பட்டி அருகே இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
மாலை 6 மணிக்கு தொடங்கிய இந்த நிகழ்ச்சி இரவு 10 மணி வரை நீடித்தது. இதில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டு நிகழ்ச்சியை கண்டு ரசித்தனர். பெரும்பாலும் தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் மட்டுமே இசை கச்சேரி நடத்தி வந்த இளையராஜாவிற்கு, நெல்லை ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு பெரும் உற்சாகத்தை கொடுத்துள்ளது.