சென்னை: லைகா புரோடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ள 'இந்தியன் 2' (Indian 2) திரைப்படம் நாளை (ஜூலை 12) திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தியன் 2 திரைப்படம் கடந்த 1996-ல் வெளியாகி மெகா ஹிட்டான 'இந்தியன்' திரைப்படத்தின் இரண்டாம் பாகமாகும். இந்தியன் திரைப்படத்தில் கமல்ஹாசன் ஏற்று நடித்த சேனாபதி கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது.
இதைத்தொடர்ந்து கடந்த 2019-ல் தொடங்கிய இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு பல்வேறு இடையூறுகளைத் தாண்டி, நாளை திரைக்கு வருகிறது. மேலும், இந்த படத்தில் மறைந்த நடிகர்கள் விவேக், நெடுமுடி வேணு, மனோபாலா ஆகியோர் நடித்துள்ளனர். இந்நிலையில், இந்தியன் 2 படத்தின் சிறப்பு காட்சி திரையிட தமிழ்நாடு அரசு நாளை ஒரு நாள் 5 காட்சிகள் திரையிட அனுமதி அளித்துள்ளது. மேலும் வழங்கியுள்ளது. அதன்படி, நாளை காலை 9 மணிக்கு தொடங்கும் காட்சி நள்ளிரவு 2 மணிக்குள் முடிவடைய வேண்டும் என தமிழ்நாடு அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது.
இந்தியன் 2 சிறப்புக் காட்சி குறித்த அரசாணை (Credits - Tamilnadu Government) வழக்கமாக, வார நாட்களில் நான்கு காட்சிகளுக்கு மட்டும் படங்களை திரையிட தமிழ்நாடு அரசு அனுமதி அளித்து வந்த நிலையில், லைகா தயாரிப்பு நிறுவனம் சிறப்பு காட்சிக்கு அனுமதி கோரியது. இந்நிலையில், நாளை ஒரு நாள் மட்டும் வழக்கமான 4 காட்சிகளோடு, சிறப்பு காட்சியுடன் சேர்த்து ஐந்து காட்சிகள் திரையிட அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனையடுத்து கமல்ஹாசன் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.
முன்னதாக, மதுரை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் ராஜேந்திரன் என்பவர் தொடர்ந்த வழக்கில், 'தன்னிடம் அனுமதி பெறாமல் இந்தியன் 2 படத்தில் வர்மக்கலை முத்திரை பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே, இந்தியன் 2 படத்தை திரையரங்குகள் மற்றும் ஓடிடி தளங்கள் என எந்தவகையிலும் வெளியிட தடை விதிக்க வேண்டும்' எனக் கூறியிருந்தார். இந்த வழக்கில் நீதிபதி, நடிகர் கமல்ஹாசன் மற்றும் தயாரிப்பாளர் சுபாஸ்கரன் தரப்பு ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: குணா ரீ-ரிலீஸ்க்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவு! - GUNA RE RELEASE