சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான நயன்தாரா, கடந்த 2015ஆம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கிய ’நானும் ரௌடி தான்’ என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படத்தை நடிகர் தனுஷ் தயாரித்திருந்தார். அப்படத்தின் போது விக்னேஷ் சிவன், நயன்தாரா இருவருக்கும் காதல் மலர்ந்த நிலையில், இருவரும் கடந்த 2022ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
இந்நிலையில் நயன்தாரா குறித்த ஆவணப் படம் ஒன்றை நெட்பிளிக்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இது வருகின்ற 18ஆம் தேதி நயன்தாரா பிறந்தநாளன்று வெளியாகிறது. இந்நிலையில் நடிகை நயன்தாரா அறிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளார். அதில் நானும் ரௌடி தான் படத்தின் காட்சிகள் ஆவணப்படத்தில் 3 விநாடி பயன்படுத்தியதற்காக 10 கோடி நஷ்ட ஈடு கேட்டு நடிகர் தனுஷ் தனக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும் தனுஷ் பற்றி பல்வேறு சர்ச்சை கருத்துக்களை தெரிவித்திருந்தார். இது திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் நயன்தாராவுக்கு பல்வேறு திரை பிரபலங்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக நயன்தாரா தரப்பு மீது இசையமைப்பாளரும் இயக்குநருமான எஸ் எஸ் குமரன் குற்றம்சாட்டி உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மூன்று வினாடிக் காட்சிக்காக நஷ்ட ஈடு கேட்டுத் தனுஷ் உங்கள் மீது வழக்கு தொடர்ந்தற்காய் வெகுண்டு எழுந்த நீங்கள், கடந்த ஆண்டு LIC என்ற என் தலைப்பை உங்கள் கணவர் விக்னேஷ் சிவன் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தியதை அறிந்திருப்பீர்கள். LIC என்ற தலைப்பு என் நிறுவனத்தின் பெயரில் இருப்பதை அறிந்த விக்னேஷ் சிவன் தன் மேலாளர் மூலம் என்னிடம் கேட்டு, நான் வழங்காத நிலையிலும் அதே தலைப்பை அவர் படத்திற்கு வைத்து விளம்பரப்படுத்தியது எந்த வகையில் நியாயம்.
என் கதைக்கும் அந்தத் தலைப்பிற்கும் பிரிக்க முடியாத ஒற்றுமை இருப்பதால் LIC என்ற தலைப்பை வழங்க முடியாத சூழல் இருக்கிறது என்று நேர்மையான முறையில் பதில் அளித்தும் அதிகாரத் தன்மையுடன் அதே தலைப்பைத் தன் படத்திற்கு விக்னேஷ் சிவன் வைக்கிறார் என்றால், 'உன்னால் என்ன பண்ண முடியும்' என்ற அதிகார நிலை தானே காரணமாய் இருக்க முடியும். அதற்கு எந்தக் கடவுள் மன்றத்தில் விக்னேஷ் சிவனைப் பதில் சொல்ல சொல்வீர்கள்.