சென்னை: கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு சூர்யா நடித்துள்ள படத்தின் டைட்டில் டீசர் இன்று வெளியாகியுள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள திரைபப்டத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இது சூர்யாவின் 44வது திரைப்படமாகும். இப்படத்தை 2டி எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது முதல் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் ’Love laughter war’ என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது. மேலும் கார்த்திக் சுப்புராஜ் சமீபத்தில் அளித்த பேட்டியில், சூர்யா நடிக்கும் திரைப்படம் ஆக்ஷன் திரைப்படமல்ல, காதல் கதை என கூறியிருந்தார். இப்படத்தில் சூர்யாவின் தோற்றம் ஜானி படத்தில் ரஜினியின் தோற்றம் போல இருப்பதாக ரசிகர்கள் சமூக வலைதளத்தில் பதிவிட்டு வந்தனர். அதுமட்டுமின்றி இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர் என்பதால் இப்படத்திற்கு ஜானி என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக ’சூர்யா 44’ படத்தின் டைட்டில் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. சூர்யா 44 படத்திற்கு ’ரெட்ரோ’ (Retro) என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ரெட்ரோ படத்தின் மிரட்டலான டைட்டில் டீசரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த டீசரில் சூர்யா தனது காதலியான பூஜா ஹெக்டேவிடம் தனது அப்பாவுடன் சேர்ந்து செய்யும் அனைத்து தவறான செயல்களையும் விட்டுவிடுவதாக சத்தியம் செய்கிறார்.