சென்னை: நடிகர் விஜய் தனது சமூக வலைதள பக்கத்தில் GOAT என்று எழுதப்பட்ட மோதிரத்துடன் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இது குறித்து நமது ஈடிவி பாரத் செய்தியாளர் தயாரிப்பாளரும், கோட் படத்தின் நடிகருமான டி.சிவாவிடம் கேட்ட போது, தமிழ்நாட்டில் கோட் திரைப்படம் 100 கோடி வசூல் செய்ததால், தான் விஜய்க்கு பரிசளித்ததாக தெரிவித்துள்ளார்.
மேலும் மோதிரத்தை விஜய் நீண்ட நேரம் அணிந்திருந்ததாகவும், “ரொம்ப அழகா இருக்கு” என்று மகிழ்ந்ததாகவும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கோட் திரைப்பட இயக்குநர் வெங்கட் பிரபு தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு, தளபதி 69 படத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். விஜய் நடிப்பில் கடந்த மாதம் வெளியான கோட் திரைப்படம் உலக அளவில் 450 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. மேலும் தமிழ்நாட்டில் மட்டும் 100 கோடிக்கு மேல் வசூல் செய்தது.
இதனிடையே, கேவின் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் விஜய் தனது 69வது படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா ஃபைஜு, கௌதம் மேனன், பிரகாஷ் ராஜ், நரேன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். விஜய், ’தமிழக வெற்றிக கழகம்’ என்ற அரசியல் கட்சி தொடங்கியுள்ளதால் சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள நிலையில், தனது கடைசி படத்தில் நடிக்கிறார்.
விஜய் தனது அரசியல் பயணத்தை தொடங்கவுள்ள நிலையில், எச்.வினோத் படத்தில் நடிக்கவுள்ளது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. எச்.வினோத் ஏற்கனவே இந்த கதையை கமல்ஹாசனை வைத்து இயக்கவிருந்ததாக கூறப்படுகிறது. அனிருத் இசையமைக்கும் தளபதி 69 படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றுள்ளது.