நீலகிரி: ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த தீபாவளி அன்று வெளியான 'அமரன்' திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இத்திரைப்படத்தை காண ஊட்டியில் உள்ள தனியார் திரையரங்கிற்கு இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி வருகை புரிந்தார். அவருக்கு நீலகிரி மாவட்டத்தில் உள்ள முன்னாள் ராணுவத்தினர் மற்றும் பொதுமக்கள் பட்டாசுகள் வெடித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்பு அவருக்கு மேடையில் படுகர் இன பாரம்பரிய உடை அணிவிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, "நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் ராணுவத்தினர்களின் ஏற்பாட்டில் இன்று அமரன் திரைப்படத்தை காண வந்தேன். அமரன் அனைத்து தரப்பு மக்களையும் இணைக்கும் திரைப்படமாக உள்ளது. படத்தில் தொடர்ச்சியான பாடல்கள் இல்லை, 100 பேர் முதல் 200 பேர் வரை இணைந்து ஆடும் பாடல்கள் காட்சி இல்லை, துணைக்கதை மற்றும் நகைச்சுவைகள் எவையும் இடம் பெறவில்லை.
ஆனால் அமரன் படத்தின் ஆரம்பம் முதல் இறுதிக் காட்சி வரை உண்மையான ராணுவ வீரருடைய வாழ்க்கை வரலாறை உணர்ச்சிகரமாக காண்பிக்க உள்ளோம் என்ற நம்பிக்கையை மூலதனமாக வைத்து உருவாக்கினோம். அமரன் படத்திற்கு இவ்வளவு பெரிய வரவேற்பு கொடுத்து, என்னை நீலகிரி மாவட்ட கலாச்சாரத்தின் படி கௌரவித்தது மிகவும் நெகிழ்ச்சியாக உள்ளது என்றார். மேலும் நீலகிரி மக்கள் இன்றளவும் தங்களது பாரம்பரியத்தை கடைபிடித்து வருவதாக பெருமிதம் தெரிவித்தார்.
இந்தப் படத்தைப் போலவே அடுத்த படமும் நல்ல கதையோடு புதியதாக அமையும் என்ற எண்ணத்தோடு இருக்கிறேன் என்றார். அமரன் திரைப்படம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வரும் நிலையில் முன்னாள் ராணுவத்தினர் சமூக வலைதளங்களில் திரைப்படத்தைக் குறித்து பேசியது குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு ராஜ்குமார் பெரியசாமி, அந்த பேட்டியை நான் பார்க்கவில்லை. இந்தத் திரைப்படத்திற்கு இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் மற்றும் ஏடிஜிபிஐ ஒப்புதல் அளித்துள்ளார்கள். இதை பற்றி இணையதளத்தில் தேடிப் பாருங்கள் எனக்கு கூறினார்.