சென்னை:திரையுலகில் செயலாற்றி வரும் 250க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்களை உறுப்பினர்களாக கொண்டு இயங்கி வரும் தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம், தமிழ் சினிமா வர்த்தக கையேடு எனும் தகவல் களஞ்சியத்தை முதல் முறையாக உருவாக்கியுள்ளது. இந்த கையேட்டை இயக்குநர் பாரதிராஜா இன்று (மார்ச் 2) வெளியிட்டுள்ளார்.
சாட்டிலைட், டிஜிட்டல், பிற மொழி டப்பிங், வெளிநாட்டு மற்றும் இந்திய திரையரங்கு உரிமைகளை வாங்குவோர்களை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் எளிதில் சென்றடையும் நோக்கில், இந்த கையேடு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கையேட்டின் மூலம், தமிழ் தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களைப் பற்றிய தகவல்களை எளிதாக பரப்புவதோடு, தயாரிப்புச் செலவுகளை குறைக்க முடியும்.
வெளிப்புற யூனிட் செலவுகள், பல்வேறு நகரங்களில் வெளிநாட்டில் படப்பிடிப்பிற்கு கிடைக்கும் மானியம், பிற மொழிகளில் பின்பற்றப்படும் சிறந்த நடைமுறைகள், மாற்றங்கள் உள்ளிட்ட தகவல்கள் இந்த கையேட்டில் இருப்பதால், தயாரிப்புச் செலவைக் குறைக்க இது உதவுகிறது. மேலும், தயாரிப்பாளர்களின் விழிப்புணர்வுக்காக தொழில்நுட்ப முன்னேற்றங்கள், வரவிருக்கும் படங்களின் வெளியீட்டு அட்டவணை, தொழில்துறை தகவல்கள், வெற்றிகரமான திரைப்படங்கள் குறித்த ஆய்வுகள், பழம்பெரும் தயாரிப்பாளர்கள் குறித்த தற்போதைய தகவல்கள், விளம்பரங்கள் உள்ளிட்டவற்றை தாங்கி வருகிறது.