ஹைதராபாத்: டோலிவுட் பிரபலம் அல்லு அர்ஜுன், தென்னிந்திய குயின் ராஷ்மிகா மந்தனா, மிரட்டல் வில்லன் பகத் பாசில் என உச்சகட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் கடந்த 2021ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் புஷ்பா தி ரைஸ். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான இப்படத்தைன் சுகுமார் இயக்கி இருந்தார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவான இப்படத்தின் பாடல்கள் படம் வெளியான தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என அனைத்து மொழிகளிலும் ஹிட் அடித்தது.
அது மட்டுமல்லாமல், சமந்தா சிறப்புத் தோற்றத்தில் ஆடியிருந்த ஊ ஆண்ட வா மாமா என்ற பாடலும், ராஷ்மிகா - அல்லு அர்ஜுனின் ஏ சாமி என்ற பாடலிலும் இடம்பெற்ற நடனங்கள் சிக்னேச்சர் மார்க்கை படத்தில் உருவாக்கின. அது மட்டுமல்லாமல், அல்லு அர்ஜுனின் நடிப்பும் ரசிகர்களைக் கவர்ந்தது. அதற்கு பரிசாக சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் அல்லு அர்ஜுன் பெற்றார்.
இதனையடுத்து, புஷ்பா 2 தி ரூல் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் பாகத்தை போலவே மைத்ரி மூவி மேக்கர்ஸ் - சுகுமார் - அல்லு அர்ஜுன் - ராஷ்மிகா மந்தனா - பகத் பாசில் மற்றும் தேவி ஸ்ரீ பிரசாத் கூட்டணி இரண்டாம் பாகத்திலும் இணைந்து நடத்தி வருகிறது. இதன் படப்பிடிப்புகள் ஆந்திராவின் வனப்பகுதிகளிலும், ஹைதராபாத் ராமோஜி பிலிம் சிட்டியிலும் படமாக்கப்பட்டு வந்தது.