நடிகர் பாலா செய்தியாளர்கள் சந்திப்பு மயிலாடுதுறை:போட்டிகள் நிறைந்த உலகில் மாணவர்களுக்கு தேவையான முக்கிய குண நலன்களை எடுத்துரைக்கும், ‘இளைய தலைமுறையும் இந்தியாவும்’ என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி, மயிலாடுதுறை தனியார் பள்ளியில் நேற்று (பிப்.4) நடைபெற்றது. இதில் இயக்குனர் மந்திரமூர்த்தி, கேபிஒய் பாலா சிறப்பு விருந்துனராக பங்கேற்றனர்.
மயிலாடுதுறை, லட்சுமிபுரம் ‘யூரோ கிட்ஸ்’ தனியார் பள்ளியில், ‘இளைய தலைமுறையும் இந்தியாவும்’ என்ற தலைப்பில், போட்டிகள் நிறைந்த உலகில் மாணவர்களுக்கு வெற்றி பெற தேவையான குணநலன்களை எடுத்துரைக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி, பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் சாதிக் பாட்சா சம்சுதீன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக அயோத்தி திரைப்பட இயக்குனர் மந்திரமூர்த்தி, சின்னத்திரை நடிகரும், சமூக ஆர்வலருமான கேபிஒய் பாலா மற்றும் மயிலாடுதுறை டிஎஸ்பி கலைக்கதிரவன் ஆகியோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில், மறைந்த நடிகர் விஜயகாந்தின் நினைவை போற்றும் விதமாக, அவரின் திருவுருவ படத்திற்கு, பள்ளி குழந்தைகள் கையில் தீபம் ஏந்தி புகழஞ்சலி செலுத்தினர்.
இதனைத்தொடர்ந்து, உயிர் காக்கும் 108 அவசர ஊர்தியில் பணியாற்றும் ஊழியர்கள், கரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய செவிலியர்கள் ஆகியோரின் சேவையை பாராட்டி அவர்களுக்கு சான்றிதழ் வழங்கி கௌரவித்தனர். நிகழ்ச்சியில், மாணவ, மாணவிகள் இளைய தலைமுறையும் இந்தியாவும் என்ற தலைப்பில், மாணவர்களுக்கு தேசபக்தியின் முக்கியத்துவம் மற்றும் தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்தினர்.
நிகழ்ச்சியில், இயக்குநர் மந்திரமூர்த்தி பேசுகையில், “சினிமாவை சினிமாவாக மட்டும் பார்க்க வேண்டும். மூளைச்சாவு அடைந்தவர்கள், உடலை தானம் செய்தால் 8 பேருக்கு உடல் உறுப்புகள் கிடைக்கும். உடல் உறுப்பு தானம் செய்தால் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்வார்கள் என்று அரசு அறிவித்துள்ளது” என்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் கேபிஒய் பாலா பேசியதாவது, நடிகர் விஜய் கட்சி துவங்கியது குறித்த கேள்விக்கு, பதில் அலித்த அவர், “நடிகர் விஜய் பீக்கில் உள்ளார், தான் வீக்கீல் உள்ளேன். எனவே, அவரைப்பற்றி பேசும் அளவிற்கு தான் பெரிய இடத்தில் இல்லை என்றும் அவர் எது செய்தாலும் சரியாக இருக்கும் என கருத்து தெரிவித்தார்.
நடிகர் விஜய் தனது கட்சிக்கு அழைத்தாள் செல்வீர்களா? என்ற கேள்விக்கு, அரசியலில் செல்லும் அளவிற்கு தனக்கு அறிவு இல்லை. பதவி ஆசை எல்லாம் தனக்கு இல்லை. மக்களுக்கு சேவை செய்வதே எனது நோக்கம் என்றார். பத்து ஆம்புலன்ஸ் என்ற இலக்கு வைத்து தற்போது, ஐந்து ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்துள்ளேன். மேலும் ஐந்து ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்துவிட்டு தொடர்ந்து அடுத்து இலக்குகளை வைத்து அவற்றை நோக்கி பயணிக்க உள்ளேன்.
பிரைவேட் ஐடிவிங் என்ற பெயரில் காசு கொடுத்து கோபத்தை வெளிப்படுத்துகின்றனர். பணத்தை கொடுத்து கோபத்தை வெளிப்படுத்த வேண்டாம், பணத்தை தன்னிடம் கொடுத்தால், மற்றவர்களுக்கு உதவுவேன். மக்களுடைய ஆதரவால், தான் தற்போது வரை செயல்பட்டு வருகிறேன். தொடர்ந்து, 100% செய்யும் சேவையில், அரசியல் நோக்கம் இல்லை அன்பின் ஏக்கம் மட்டும் உள்ளது” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:“என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்கள்” - அரசியல் கட்சி துவக்கத்திற்கு வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு விஜய் நன்றி!