சென்னை: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரி உள்ளிட்டவற்றில் காலியாக உள்ள 4 ஆயிரம் உதவி பேராசிரியர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என கடந்த மார்ச் மாதம் 14 தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் தரப்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து இத்தேர்வினை எழுதுவதற்கு 73 ஆயிரத்து 311 பேர் விண்ணப்பித்திருந்தனர்.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஏற்கனவே பணியாற்றி வரும் கௌரவ விரிவுரையாளர்கள், உதவி பேராசிரியர் பணி நியமனத்தில் தங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது.
அதேபோல தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றி வரும் விரிவுரையாளர்களும் தங்களுக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என வழக்குத் தொடுத்தனர். இந்த வழக்குகள் காரணமாக உதவி பேராசிரியர் பணியிடத்திற்கான தேர்வை நடத்துவதில் ஆசிரியர் தேர்வு வாரியத்திற்குச் சிக்கல் எழுந்துள்ளது.