சென்னை:2024-25ஆம் கல்வியாண்டில் பொறியியல் படிப்பில் 433 கல்லூரிகளில் பி.இ, பி.டெக் படிப்பில் இளங்கலையில் 2 லட்சத்து 33 ஆயிரத்து 376 இடங்களில் மாணவர்களை சேர்ப்பதற்கு அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி வழங்கி உள்ளது. அதில் ஒற்றை சாளர முறையிலான கலந்தாய்வில் தமிழ்நாடு பொறியியல் மாணவர்கள் சேர்க்கை மூலம் 1 லட்சத்து 79 ஆயிரத்து 938 இடங்கள் நிரப்புவதற்கு அனுமதிக்கப்பட்டது.
தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கையில் ஒரு லட்சத்து 99 ஆயிரத்து 868 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, தரவரிசைப் பட்டியல் ஜூலை 10ஆம் தேதி வெளியிடப்பட்டன. அதனைத் தொடர்ந்து, சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றது. பொதுப்பிரிவு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூலை 22ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 3ஆம் தேதி வரையில் நடைபெற்றது.
இந்த நிலையில், பொதுப்பிரிவு கலந்தாய்வு முடிவுற்ற நிலையில், 3 சுற்றுகளிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான ஒதுக்கீட்டில் 12 ஆயிரத்து 915 இடங்களும், பொதுப்பிரிவில் 1 லட்சத்து 8 ஆயிரத்து 780 இடங்களும் என 1 லட்சத்து 21 ஆயிரத்து 695 மாணவர்களுக்கு கல்லூரியில் சேர்வதற்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. துணைக் கலந்தாய்விற்கு 28ஆம் தேதி முதல் 4ஆம் தேதி வரையில் மாணவர்கள் விண்ணப்பம் செய்து வருகின்றனர்.
அவர்களுக்கான துணைக் கலந்தாய்விற்கு செப்டம்பர் 6ஆம் தேதி காலை 9 மணி முதல் 7ஆம் தேதி மாலை 7 மணி வரையில் விரும்பும் கல்லூரிகளை பதிவு செய்யலாம். 8ஆம் தேதி தற்காலிக இடம் ஒதுக்கீடு செய்யப்படும். 9ஆம் தேதி இறுதி ஒதுக்கீடு வழங்கப்படும் என மாணவர் சேர்க்கைக்குழு தெரிவித்துள்ளது. பொறியியல் படிப்பில் அனுமதிக்கப்பட்ட இடங்களில் 58 ஆயிரத்து 243 இடங்கள் காலியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:டிஎன்பிஎஸ் சி குரூப் 2 ஹால் டிக்கெட் வெளியானது! - TNPSC Group 2 Hall Ticket