தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / education-and-career

12-ம் வகுப்பு பொதுத் தேர்வு: மாணவர்களை கண்காணிக்கும் பறக்கும் படை கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்ன? - 12TH PUBLIC EXAMS

12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு வரும் மார்ச் 3 ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், பறக்கும் படையினர் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது

மாணவர்கள் கோப்புப்படம்
மாணவர்கள் கோப்புப்படம் (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 26, 2025, 7:31 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் மாநிலப் பாடத் திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வு 12ஆம் வகுப்பிற்கு மார்ச் 3ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரையிலும், 11ஆம் வகுப்பிற்கு மார்ச் 5ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரையிலும், 10ஆம் வகுப்பிற்கு மார்ச் 28ஆம் தேதி முதல் ஏப்ரல் 15ஆம் தேதி வரையிலும் நடைபெறுகிறது.

இதனிடையே பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் மதிப்பெண்கள் அரசுத் தேர்வுத்துறைக்கு பள்ளிக்கல்வித்துறையின் மூலம் அனுப்பும் பணியும் நடைபெற்று வருகிறது. 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வினை 7 ஆயிரத்து 518 பள்ளிகளில் இருந்து 3,78,545 மாணவர்களும், 4,24,023 மாணவிகள், 18,344 தனித்தேர்வர்கள், சிறைவாசிகள் 145 பேர் என 8,21,057 மாணவர்கள் 3316 தேர்வு மையங்களில் தேர்வு எழுதுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். தேர்வுப் பணிகளுக்கு 43,446 தேர்வு அறை கண்காணிப்பாளர்களும், 4,470 பறக்கும் படை கண்காணிப்பாளர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மார்ச் 5ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரையில் நடைபெறும் 11 ஆம் வகுப்பு தேர்வை 7557 பள்ளிகளில் படித்த 3,89,423 மாணவர்களும், 4,28,946 மாணவிகளும், 4,755 தனித்தேர்வர்களும், 137 சிறைவாசிகள் என 8,23,261 பேர் 3316 தேர்வு மையங்களில் தேர்வு எழுதுகின்றனர். அதனை கண்காணிக்க 44,236 அறைக் கண்காணிப்பாளர்களும், 4470 பறக்கும் படை உறுப்பினர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை 12,480 பள்ளிகளில் படித்த 4,46,411 மாணவர்களும், 4,40,465 மாணவிகளும், 25,888 தனித் தேர்வர்களும், 272 சிறைவாசிகள் என 9,13,036 மாணவர்கள் 4113 தேர்வு மையங்களில் தேர்வு எழுத உள்ளனர். இவர்களை கண்காணிக்க 48,428 அறை கண்காணிப்பாளர்களும், 4858 பறக்கும் படையினரும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

இந்நிலையில், தேர்வுகளை கண்காணிக்க நியமிக்கப்படும் ஆசிரியர்களுக்கான பணிகளையும் வரையறை செய்து அரசுத் தேர்வு இயக்ககம் வழங்கி உள்ளது. அதில் தேர்வுகள் நடைபெறும் போது வெளியில் இருந்து அதிரடியாக கண்காணிக்கும் பணியில் பறக்கும் படையில் நியமனம் செய்யப்படும் ஆசிரியர்கள் செய்ய வேண்டியவை குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவிகளை சோதனையிட ஆசிரியைகள் நியமனம்

  • பறக்கும் படையில் தேர்வுப் பணியில் நல்ல அனுபவமும், மிக்க நேர்மையும் வாய்ந்த துடிப்பான (குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் அனுபவம்) ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.
  • பெண் தேர்வர்களைச் சோதனையிட பெண் ஆசிரியர்களையும் பறக்கும் படை உறுப்பினர்களாக நியமித்தல் வேண்டும்.
  • பறக்கும் படையில் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்படும் ஆசிரியர்கள் மிக நேர்மையுடன், உண்மையான முறையில் செயல்படுபவர்களாக இருத்தல் வேண்டும். எவரிடத்திலும் அச்சமின்றியும், அதே சமயத்தில் தமக்கு அளிக்கப்பட்டப் பொறுப்பினை எல்லை மீறாமல் செயல்படுபவர்களாகவும் இருத்தல் மிகவும் அவசியம்.
  • அடிக்கடி புகார்களுக்கு இடம் அளிக்கக்கூடிய தேர்வு மையங்களைப் பறக்கும் படை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும்.
  • அனைத்து தேர்வு மையங்களுக்கும் 10 அறைகளுக்கு ஒருவர் என்ற விகிதத்தில் நிலையான படை அமைத்து தீவிரமாகக் கண்காணிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
  • தேர்வு மையத்தில் ஒழுங்கீனச் செயலில் ஈடுபட்டு பறக்கும் படையினரால் கண்டுபிடிக்கப்பட்ட நிகழ்வுகள் குறித்து செய்தித்தாள்கள் மூலம் வெளியிடப்பட்டால் ஒழுங்கீனச் செயல்கள் நடைபெறுதல் பெருமளவு குறைக்கப்பட வாய்ப்பு உள்ளதால், அதுகுறித்து ஆய்வு அலுவலர்களிடம் தெரிவித்து தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • பறக்கும் படையினர் தங்களது பணியை செய்யும் போது தேர்வெழுதும் மாணவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் பணியாற்ற வேண்டும்.
  • பறக்கும் படையினர் ஒழுங்கீனச் செயலில் ஈடுபட்டோரை கையும் களவுமாகப் பிடிக்கும் போது தேர்வரிடமிருந்து கைப்பற்றிய விடைத்தாள் மற்றும் ஏனைய ஆவணங்களில், சம்பந்தப்பட்டத் தேர்வராலேயே பதிவெண்ணைக் குறிப்பிடச் செய்து, அவரது கையொப்பத்துடன் தங்களது அறிக்கையையும் தெளிவாக எழுதி முதன்மைக் கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும்.
  • பறக்கும் படை, நிலையான படை உறுப்பினர்கள் தேர்வு மையத்திற்கு பார்வையிடச் செல்லும் போது சுமுகமான முறையில் பணியாற்றுமாறு அறிவுறுத்தப்பட வேண்டும்.
  • தேர்வு முடிந்த பின் மாணவர்களை அமைதியாக அறையைவிட்டு வெளியேறச் செய்தல் வேண்டும்.

பறக்கும்படை உறுப்பினர்கள் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவை

  • பணியின் போது தேர்வர்கள் அச்சமுறும் வகையில் செயல்படக்கூடாது.
  • தேர்வர்களின் மனநிலை, உடல்நிலை, தேர்வெழுதும் நேரம் பாதிக்காத வகையில் செயல்படுதல் வேண்டும்.
  • தேர்வர்கள் கண்ணியமாக நடத்தப்படுதல் வேண்டும்.
  • சந்தேகத்திற்குரிய தேர்வர்களிடம் மட்டும் சோதித்தல் போதுமானது. அனைவரையும் (கட்டாயமாக) சோதித்தல் அவசியம் இல்லை.
  • தவறுகளைக் கண்டுபிடிக்கும் போது விருப்பு, வெறுப்பின்றி கடமையாற்ற வேண்டும்.

இதையும் படிங்க:சிபிஎஸ்இ மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முறையில் மாற்றம்.. என்ன தெரியுமா?

  • தேர்வு மையத்தில் ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபட்ட தேர்வர்கள் எவரேனும் கண்டுபிடிக்கப்பட்டால், அந்நிகழ்வு குறித்து பறக்கும் படையினரோ, முதன்மைக் கண்காணிப்பாளரோ, துறை அலுவலரோ தன்னிச்சையாக பத்திரிகைத் துறையினருக்கோ, தொலைக்காட்சியினருக்கோ தெரிவிக்கக் கூடாது. முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர்கள் போன்ற ஆய்வு அலுவலர்களிடம் மட்டும் தான் தெரியப்படுத்துதல் வேண்டும்.
  • பறக்கும் படை உறுப்பினர்கள் தேர்வு எழுதும் வளாகத்தினை, வகுப்பறை மட்டுமின்றி வெளிப்பகுதி மற்றும் கழிப்பறை மற்றும் தளப்பகுதியினையும் பார்வையிட்டு, முறைகேடு ஏதும் நடைபெறவில்லை என்பதனை உறுதி செய்துக் கொள்ள வேண்டும் உள்ளிட்ட வழிமுறைகளை தெரிவித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details