சென்னை: பொதுத்தேர்வு முறைகளில் மாற்றம் கொண்டு வருவதற்கான வரைவு அறிக்கையை சிபிஎஸ்சி (Central Board of Secondary Education) வெளியிட்டுள்ளது. அதில், 2026ஆம் கல்வியாண்டில் இருந்து பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுதோறும் இரண்டு பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் எனவும், இதன் மீதான கருத்துக்களைப் பொதுமக்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் வரும் மார்ச் 9ஆம் தேதிக்குள் தெரிவிக்கலாம் எனவும் வரைவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சிபிஎஸ்இ வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "2025ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு பிப்ரவரி 15 ஆம் தேதி முதல் மார்ச் 18 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அதனை 24 லட்சத்து 12 ஆயிரத்து 72 மாணவர்கள் 84 பாடத்தலைப்புகளில், 17 நாட்கள் தேர்வு எழுதுகின்றனர். இதற்காக தேர்வுகள் நடத்த வெளியிடப்படும் கால அட்டவணையில் 32 நாட்கள் பள்ளி வேலை நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
இரண்டு முறை தேர்வு:
அதன்படி 2026 ஆம் ஆண்டு முதற்கட்டமாக பத்தாம் வகுப்பிற்கு புதிய விதிமுறைகள் படி பொதுத்தேர்வு நடத்தப்படும். அதன்படி பிப்ரவரி 17 ஆம் தேதி முதல் மார்ச் 6 ஆம் தேதி வரை முதல் கட்டமாகவும், மே 5ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை இரண்டாம் கட்டமாகவும் நடத்தப்படும். இதில், 26 லட்சத்து 60 ஆயிரம் மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். முதல் கட்டத்தில் 18 நாட்களும், இரண்டாம் கட்டத்தில் 16 நாட்களும் தேர்வு நடத்தப்படும்.
பிப்ரவரி மற்றும் மே என இரண்டு முறை மாணவர்கள் தேர்வை எதிர்கொள்ளலாம். பிப்ரவரியில் எழுதும் தேர்வில் மாணவர்கள் பெறுகின்ற மதிப்பெண்ணில் மனநிறைவு கொண்டால், மே மாதம் நடத்தப்படும் தேர்வை அவர்கள் எழுத வேண்டியதில்லை. அவ்வாறு இல்லாத பட்சத்தில் மதிப்பெண்களை உயர்த்த மே மாத தேர்வையும் மாணவர்கள் எழுதலாம்.
புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் புதிய பொதுத்தேர்வு நடைமுறையையே சிபிஎஸ்சி அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி புதிய பொதுத்தேர்வு விதிமுறை என்பது மாணவர்கள் பொதுத் தேர்வுகளை எளிதாக எதிர்கொள்வதற்கும், மன அழுத்தம் ஏற்படுவதைத் தவிர்க்கவும், மாணவர்கள் பாடங்களை புரிந்து கொண்டு படிக்கவும், மனப்பாடம் செய்வதை தடுக்கவும் இந்த புதிய தேர்வு முறை வழி வகுப்பதாக வரைவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய வரைவு அறிக்கை தேர்வு விதிமுறைகள்:
மாணவர்கள் ஒரு பொதுத்தேர்வை எழுதலாம், விரும்பினால் இரண்டாம் முறையும் பொதுத்தேர்வை எதிர்கொள்ளலாம். முதற்கட்ட பொதுத்தேர்வு பிப்ரவரி 17ஆம் தேதி முதல் மார்ச் 6ஆம் தேதி வரையும், இரண்டாம் கட்ட பொதுத்தேர்வு மே 5ஆம் தேதி முதல் மே 20ஆம் தேதி வரை என இரு முறையும் நடைபெற உள்ளது.