புதுடெல்லி:தனிநபர்களின் மாதாந்திர செலவு குறித்து மத்திய அரசின் புள்ளியியல் மற்றும் திட்டங்கள் அமலாக்கத்துறை சார்பில் நாடு முழுவதும் வீடுவீடாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் கடந்த 2011-2012 மற்றும் 2023-2024 ஆகிய நிதியாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் தனிநபர் மாதாந்திர செலவு என்பது இரு மடங்காக அதிகரித்திருப்பதாக தெரிய வந்துள்ளது.
நாடு முழுவதும் ஊரக மற்றும் நகர்ப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், நாட்டிலேயே தனிநபர் மாதாந்திர செலவு அதிகம் இருக்கும் மாநிலமாக சிக்கிம் உள்ளது. இங்கு 2023-2024-ம் ஆண்டில் தனிநபர் மாதாந்திர செலவு சராசரியாக ரூ.13,927 ஆக உள்ளது. நாட்டிலேயே குறைப்பட்ச தனிநபர் மாதாந்திர செலவு உள்ள மாநிலமாக சத்தீஸ்கர் உள்ளது. இங்கு தனிநபர்களின் மாதாந்திர செலவு சராசரியாக ரூ.2,739 ஆக உள்ளது.
மக்களின் வாழ்க்கைத் தரம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய காரணிகளை அறிய இந்த ஆய்வு மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த சர்வே மூலம், ஊரகம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சியில் உள்ள ஏற்றத்தாழ்வு குறைந்துள்ளதாகவும், நுகர்வு சரிவிகிதமின்மை சரிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்பட்டு வருவதாகவும் இந்த சர்வேயில் தெரிய வந்திருப்பதாக கூறப்படுள்ளது.
நாடு முழுவதும் ஊரகப் பகுதியில் 1,54,357 வீடுகள் மற்றும் நகர்ப்பகுதிகளில் 1,07,596 வீடுகள் என மொத்தம் 2,61,953 வீடுகளில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் ஊரகப் பகுதிகளில் உள்ளவர்களின் மாதாந்திர சராசரி செலவு ரூ.4,122 என்றும் நகர்ப்பகுதிகளில் ரூ.6,996 என்றும் தெரிய வந்துள்ளது.