டெல்லி : டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் தனக்கு எதிரான அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவை நாளை (மார்ச்.27) டெல்லி உயர்நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறது. தலைநகர் டெல்லியில் மதுபான கொள்கை வகுத்ததில் 100 கோடி ரூபாய் வரை முறைகேடு நடந்ததாக கூறி சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்த வழக்கு தொடர்பாக முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா, சந்யேந்திர ஜெயின் உள்ளிட்டோர் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடந்த கடந்த வாரம் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
மேலும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவலில் எடுத்து விசாரித்து வருகிறது அமலாக்கத்துறை. இந்நிலையில், தனக்கு எதிரான கைது நடவடிக்கையை கண்டித்து அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து உள்ளார். நாளை (மார்ச்.27) அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வருகிறது.
நாளை (மார்ச்.27) காலை 10.30 மனிக்கு நீதிபதி சுவர்ன கந்தா அமர்வில் மனு விசாரணைக்கு வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த மார்ச் 21ஆம் தேதி அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்ட நிலையில், மார்ச் 28ஆம் தேதி வரை அவரை காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்து உள்ளது.
முன்னதாக அமலாக்கத்துறை அனுப்பிய 9 சம்மன்களை புறக்கணித்த அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கில் தன் மீது நடவடிக்கை எடுப்பதில் இருந்து இருந்து இடைக்கால நிவாரணம் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தின் டிவிசன் பிரிவில் மனுத் தாக்கல் செய்தார். இதில் அவருக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கப்படாத நிலையில் அமலாக்கத்துறையால் அவர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் கே சந்திரசேகர ராவின் மகளும் தெலங்கானா எம்எல்சியுமான கவிதாவின் காவலை ஏப்ரல் 9ஆம் தேதி வரை நீடித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையும் படிங்க :மக்களவை தேர்தல்: பாஜக 6வது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! மணிப்பூரை கைப்பற்றுமா பாஜக? - Lok Sabha Polls