சுதந்திர தின விழா கொண்டாட்டம் - திருப்பூரில் உற்பத்தி ஆகும் பேப்பர் தேசிய கொடி, அலங்கார பொருட்களுக்கு அமோக வரவேற்பு!
🎬 Watch Now: Feature Video
திருப்பூர்: நாடு முழுவதும் 77வது சுதந்திர தின விழாவை எழுச்சியாக கொண்டாடுவதற்கு மத்திய, மாநில அரசுகள் மட்டுமின்றி நாட்டு மக்களும் தயாராகி வருகின்றனர். அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் பட்டொளி வீசி பறக்க தேவையான தேசியக்கொடிகள் மற்றும் அலங்காரப் பொருள்கள் தயாரிக்கும் பணி, நாடு முழுவதும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் திருப்பூரில் உள்ள அச்சக நிறுவனம் ஒன்று காகிதங்களைக் கொண்டு வித விதமான, அலங்கார பொருட்கள் தயாரிப்பு பணியில் அசத்தி வருகிறது.இதில் பென்சில் வைக்கப்பட்ட கொடி, கார்ட்டூன் கொடி ஸ்டிக்கர்கள், மூவர்ண பறவைகள், மற்றும் பட்டாம்பூச்சியில் மூவர்ண தோரணங்கள் தயாரிக்கப்பட்டு கேரளா, ஆந்திரா கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கு அனுப்பப்படுகின்றன.
அதுமட்டுமல்லாமல் குழந்தைகளைக் கவரக் கூடிய வகையில் மகாத்மா காந்தி, அப்துல் கலாம், நேதாஜி, பகத்சிங், காமராஜர், விவேகானந்தர் ஆகியோரது படங்கள் கொண்ட முகமூடிகள் தயார் செய்து வருகின்றனர். மேலும் பேப்பர்களை கொண்டு 20க்கும் மேற்பட்ட வகையில் தேசியக்கொடி மற்றும் தோரணங்கள் வித்தியாசமான வடிவமைப்புகளில் தயாரிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து அச்சக உரிமையாளர் குமார் கூறுகையில், திருப்பூரில் வேலைவாய்ப்பு குறைந்து விட்ட நிலையில், சுதந்திர தின விழாவையொட்டி அலங்காரப் பொருட்கள் தயாரிக்கும் தொழில் கைகொடுத்ததாகவும், வழக்கமாக இதுபோன்ற பனிகள் சிவகாசி மற்றும் வட இந்தியாவில் தான் செய்வார்கள். ஆனால் இப்போது இந்த பணிகள் திருப்பூரிலும் நடைபெற்றுவருகிறது. தற்போது இங்கு தயாரிக்கும் அலங்கார பொருள்களுக்கு நேரடி விற்பனையில் மட்டுமல்லாது ஆன்லைன் விற்பனையிலும் நல்ல வரவேற்பு இருப்பதாக மகிழ்ச்சிபட தெரிவித்தார்.