தூத்துக்குடியில் 61 நாட்கள் மீன்பிடி தடை காலம் நிறைவு - மீனவர்கள் மகிழ்ச்சி!
🎬 Watch Now: Feature Video
தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளம் மீனவ கிராமத்திலிருந்து சுமார் 200க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் ஆழ் கடலில் சூரை மீன் பிடிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கடல் வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கத்திற்காக ஏப்ரல் மற்றும் மே ஆகிய மாதங்களில் மீன் பிடிக்க மத்திய அரசு ஆண்டுதோறும் தடை விதிக்கிறது. இக்கால கட்டத்தில் மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும் என்பதால், மீன்வளத்தைப் பாதுகாக்க இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது.
இந்த ஆண்டிற்கான மீன்பிடி தடை காலம் தமிழ்நாட்டின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி தொடங்கி, ஜூன் 14ஆம் தேதி வரை மொத்தம் 61 நாட்கள் அமலில் இருந்தது. மீன்பிடி தடைக்காலத்திற்கு பிறகு கடந்த 17ஆம் தேதி முதல் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற விசைப்படகு மீனவர்கள் மீன்களுடன் கரை திரும்பினர்.
கரை திரும்பிய மீனவர்களுக்கு ஏற்றுமதி ரகம் வாய்ந்த சூரை, சிலாச்சுரை, வரிச்சூரை, கேரை, கட்டா, ஐலேஷ் மற்றும் சீலா, ஊலி ஆகிய மீன்கள் அதிக அளவில் கிடைத்தன. மீன்கள் கிலோ 90 ரூபாய் முதல் 900 ரூபாய் வரையும், விலை போனதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த மீன்கள் கேரளா மற்றும் அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலத்திற்கு பின்பு ஆழ்கடல் மீன்பிடிப்பிற்கு சென்று திரும்பிய மீனவர்களுக்கு ஏற்றுமதி ரகம் வாய்ந்த மீன்கள் நன்கு கிடைத்து, அதற்கு நல்ல விலை கிடைத்ததும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.