ஆடிப்பெருக்கு விழா: மளமளவென உயர்ந்த மல்லிகைப்பூ விலை! - நிலக்கோட்டை மலர் சந்தை பூக்கள் விலை
🎬 Watch Now: Feature Video
திண்டுக்கல்: நிலக்கோட்டை மலர் சந்தைகளில் ஆடிப்பெருக்கு விழாவையொட்டி பூக்களின் விலை அதிகரித்துள்ளது. ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.900 கடந்து விற்பனையாகிறது. அதேபோல் இதர பூக்களின் விளையும் அதிகரித்துள்ளது.
தென் தமிழகத்தின் பிரசித்தி பெற்ற மலர் சந்தைகளில் ஒன்றான நிலக்கோட்டை மலர் சந்தையில், சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து மல்லிகைப்பூ, கனகாம்பரம், செண்டு மல்லி, கோழிக்கொண்டை உள்ளிட்ட பல்வேறு மலர்கள் விற்பனைக்காகக் கொண்டுவரப்படுவது வழக்கம்.
இங்கு விற்பனைக்குக் கொண்டுவரப்படும் மலர்கள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்கள் மற்றும் விமானம் மூலம் வெளி நாடுகள் வரை ஏற்றுமதி செய்யப்படுகிறது. சுமார் கிலோ 250 முதல் 300 வரை விற்பனையாகும் மலர்கள் சில சீசன்களில் மட்டும் பல மடங்கு விலை உயர்ந்து விற்பனையாகும். மேலும், ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கு விழாவின் முந்தைய நாட்களில் பூக்கள் விலை சரமாரியாக உயர்ந்து காணப்படுவது வழக்கம்.
அந்த வகையில் நாளை (03.08.2023) ஆடிப்பெருக்கு விழாவையொட்டி பூக்களின் விலை இருமடங்கு உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் மல்லிகைப்பூ கிலோ ஒன்றுக்கு ரூ.850 முதல் ரூ.900-ம் வரை விற்பனையானது. மேலும் முல்லை பூ ரூ. 450, ஜாதி பூ ரூ. 400, சம்பங்கி பூ ரூ.200, கனகாம்பரம் ரூ.350, பட்டன் ரோஸ் ரூ.200, சாதா ரோஸ் ரூ.220, செண்டு மல்லி ரூ.100, கோழிக்கொண்டை ரூ.100, மரிக்கொழுந்து ரூ.120, துளசி ரூ.50 என விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனையாகி வருகிறது.
இதையும் படிங்க: சென்னையில் பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை.. தனியார் நிறுவன உரிமையாளர் கைது!