கோடை வெயில் - நீர்மோர் பந்தலில் தரப்பட்ட குடை, நல்லெண்ணெய், சீயக்காய் பொடி
🎬 Watch Now: Feature Video
மயிலாடுதுறை: தமிழ்நாட்டில் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இத்தகைய சிரமத்தில் இருந்து பொதுமக்களின் உடல் நலனைக் காக்கும் பொருட்டு சமூக அக்கறையுடன் பல்வேறு சங்கங்கள், அமைப்புகள் மற்றும் நற்பணி மன்றங்கள் சார்பில் தமிழ்நாடு முழுவதும் உள்ள நகர்ப்புறங்களில் மட்டுமின்றி கிராமப்புறங்களிலும் தண்ணீர் பந்தல் அமைத்து நீர்மோர், தர்பூசணி பழம் உள்ளிட்டவைகளை இலவசமாக பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இத்தகைய சிரமத்தில் இருந்து பொதுமக்களின் உடல் நலனை காக்கும் பொருட்டு சமூக அக்கறையுடன் மயிலாடுதுறை நகரின் கூறைநாடு கடைவீதியில் மூவேந்தர் முன்னேற்றக் கழகம் சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது.
மாநில இளைஞரணி துணை செயலாளர் கில்லி பிரகாஷ் ஏற்பாட்டின்பேரில், நீர் மோர் பந்தல் இன்று ( ஏப்.19 ) தொடங்கப்பட்டது. இதில், பொதுமக்களுக்கு வெயிலின் தாக்கத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் வகையில் குடைகளை வழங்கி குளிர்ச்சி தரும் வகையில் நீர் மோர், இளநீர், தர்பூசணி உள்ளிட்டப்பொருட்கள் வழங்கப்பட்டன.
தொடர்ந்து கடும் கோடை வெப்பம் அதிகரித்து வரும் நிலையில் பண்டைய தமிழர் முறைப்படி வாரம் ஒரு முறை எண்ணெய் தேய்த்து குளிப்பதை ஊக்குவிக்கும் வகையில் நல்லெண்ணெய், சீயக்காய் பொடி வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து பள்ளி மாணவர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கப்பட்டது. மயிலாடுதுறை நகரின் முதன் முறையாக நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கருங்காலி, நிலவேம்பு மரங்களின் மகத்துவத்தை போற்றும் வகையில் கைவினைப்பொருட்கள் செய்யும் இளைஞர்!