பட்டாக்கத்தியுடன் டாஸ்மாக் ஊழியரிடம் மாமூல் கேட்ட நபர் - வைரலாகும் வீடியோ - பட்டா கத்தியுடன் டாஸ்மாக் ஊழியரிடம் ரகளை
🎬 Watch Now: Feature Video
தஞ்சை: தஞ்சையை அடுத்த கரந்தை சி.ஆர்.சி. அரசு போக்குவரத்துக் கழக பணிமனை அருகே அரசின் டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது. இந்நிலையில், நேற்று (மார்ச்.25) அங்கு வந்த சமூக விரோதிகள் 4 பேர் டாஸ்மாக் கடையில் மதுபானப்பாட்டில்களும், பணமும் வேண்டும் என டாஸ்மாக் ஊழியர்களிடம் பயங்கர ஆயுதங்களைக் காட்டி மிரட்டியுள்ளனர்.
மேலும், நடுரோட்டில் பட்டாக்கத்தியுடன் அவ்வழியாக வந்த வாகனத்தையும் மறித்து, ரகளையில் ஈடுபட்டதாகத் தெரியவருகிறது. இந்தச் சம்பவத்தால் பொதுமக்கள் மிகவும் அச்சமடைந்துள்ளனர். நீண்ட நேரம் அப்பகுதியில் சமூக விரோதிகள் அட்டகாசம் செய்து வந்த நிலையில் காவல்துறையினர் யாரும் அப்பகுதிக்கு வரவில்லை எனப் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதனால், பொதுமக்கள் அனைவரும் அங்கிருந்து அவசர அவசரமாக அப்பகுதியை விட்டு ஓட்டம் பிடித்தனர். மாலை நேரத்தில் மதுபோதையில் பட்டாக்கத்தியுடன், டாஸ்மாக் ஊழியர்களை மிரட்டி பணம் கேட்ட சம்பவம் தஞ்சையில் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
வீடியோ காட்சிகள் மற்றும் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் தஞ்சை கிழக்கு போலீசார் சம்பந்தப்பட்ட ரவுடிகளை தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாக, டாஸ்மாக் ஊழியர் சங்கம் சிஐடியு கண்டனம் தெரிவித்துள்ளது. இதனைப் பார்த்த சமூக ஆர்வலர்கள் தங்களது செல்போன்களில் இதனை வீடியோவாகவும் பதிவு செய்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.