ஹைதராபாத்: உலக தைராய்டு தினம், இன்று (மே 25) கடைபிடிக்கப்படுகிறது. மனிதர்களின் வளர்ச்சி, மேம்பாடு மற்றும் உடலியல் மற்றும் மனவியல் மாறுபாடுகளில் தைராய்டு சுரப்பி முக்கிய பங்கு வகிக்கிறது. முதலில், தைராய்டு என்பது ஒரு சுரப்பியே. தற்போதைய சூழலில், தைராய்டு சுரப்பி என்பது ஹார்மோன் பிரச்னைகளாக உலகம் முழுவதும் கருதப்படுகிறது.
இந்த தைராய்டு சுரப்பியால், ஆண்களை விட பெண்களே அதிக அளவில் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. இந்த தைராய்டு சுரப்பியானது வண்ணத்துப்பூச்சியின் வடிவில் காணப்படுகிறது. கழுத்தில் உள்ள மூச்சுக்குழாயில் உள்ள இந்த தைராய்டு சுரப்பியில் தைராய்டு ஹார்மோன்கள் சுரக்கப்படுகிறது.
இதன் மூலம் உடலின் செயல்பாடுகளை மாற்றி அமைக்கவும், அதனை சீர்படுத்தவும் முடியும். இந்த நிலையில், உலக தைராய்டு தினமானது, பொதுமக்கள் இடையே தைராய்டு சுரப்பி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே உருவாக்கப்பட்டது. கடந்த 1965ஆம் ஆண்டில் தைராய்டு நோய் குறித்த விழிப்புணர்வுக்கு அடித்தளம் போடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, ஐரோப்பிய தைராய்டு கூட்டமைப்பின் ஆண்டு ஆலோசனைக் கூட்டமானது, கடந்த 2008ஆம் ஆண்டு செப்டம்பரில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில்தான் தைராய்டு தினம் கடைபிடிக்கப்படுவது, உலகம் முழுவதும் விரிவாக்கப்பட்டது.
தைராய்டு அறிகுறிகள்: உடல் சோர்வு, உடல் குளிர், மலச்சிக்கல், வறண்ட தோல், உடல் எடை அதிகரிப்பு, முகத்தில் வீக்கம், குரலில் மாற்றம், தசை பலவீனம், தசை வலி, மாதவிடாய் சுழற்சியில் மாற்றம், முடி உதிர்தல், மன அழுத்தம், நினைவாற்றல் பிரச்னைகள் மற்றும் மெதுவான இதயத் துடிப்பு உள்பட பல அறிகுறிகள் தைராய்டு நோயின் அறிகுறிகள் ஆகும்.
TSH பரிசோதனை என்றால் என்ன? தைராய்டு சுரப்பியால் பாதிக்கப்பட்டவர் மருத்துவரை அனுகும்போது, முதலில் தைராய்டு சுரப்பியின் வளர்ச்சி நோயாளியின் எந்த பாகத்தில் உள்ளது என்பதை தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமான ஒன்று. இதனையடுத்து, தைராய்டு சுரப்பியின் நிலையை அறிய ரத்தப் பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும்.
இந்த பரிசோதனையானது ‘தைராய்டை தூண்டும் ஹார்மோன் சோதனை’ (Thyroid Stimulating Hormone Test) என அழைக்கப்படுகிறது. இந்த சோதனையின் மூலம், நோயாளியின் உடலில் தைராய்டு சுரப்பி எந்த அளவில் உள்ளது என்பதை அறிந்து, அதற்கேற்ற சிகிச்சையை அளிக்க முடியும்.
தைராய்டு நோய்கள் வர காரணம் என்ன? ஆரோக்கியம் அல்லாத உணவு முறைகள் மற்றும் உடல் சோர்வே தைராய்டு தொடர்பான நோய்கள் வருவதற்கு முக்கிய காரணமாக விளங்குகிறது. எனவே, ஆரோக்கியத்துடன் கூடிய உணவு பழக்க வழக்கங்களை மேற்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
அதேநேரம், உரிய சோதனைகளுக்குப் பிறகு ஒருவருக்கு தைராய்டு தொடர்பான பிரச்னை இருப்பது உறுதி செய்யப்பட்டால், அவர் மருத்துவரின் அறிவுரைப்படி தகுந்த மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அது மட்டுமல்லாமல், வழக்கமான சோதனைகளை மேற்கொண்டு, உடலை கட்டுப்பாட்டில் வைத்தால், எளிதில் தைராய்டு தொடர்பான நோய்களில் இருந்து விடுபடலாம் என்பதே மருத்துவர்களின் கருத்தாக உள்ளது.
இதையும் படிங்க: கர்ப்ப காலத்தில் ஏற்படும் மன அழுத்தத்தால் குழந்தையின் பேச்சாற்றல் அதிகரிக்கிறது - ஆராய்ச்சியில் ஆச்சரிய தகவல்