சென்னை: பருவ காலங்களுக்கு ஏற்றார் போல் நாம் சருமத்தை பாதுகாப்பது அவசியம். குளிர்காலத்தில், நமது சருமம் அதிகமாக வறண்டு தோலில் எரிச்சல் ஏற்படும். இதே போல் தான் பச்சிளங்குழந்தைகளின் சருமமும் வறண்டு விடும். இதனால் அரிப்பு, தொற்றுநோய்கள் போன்றவை ஏற்படும் வாய்ப்புகளும் அதிகமுள்ளன. ஆகவே அதிக முக்கியத்துவம் கொடுத்து, குழந்தைகளின் சருமத்தை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.
ஹார்ஷான சோப்புகளை பயன்படுத்தாதீர்கள்: குளிர்காலத்தில் இயற்கையாகவே சருமம் வறட்சியடையும். இந்த நிலையில் ஹார்ஷான சோப்புகளை பயன்படுத்தினால் குழந்தையின் சருமம், மேலும் வறட்சி அடையும். ஆகவே குழந்தைகளின் மென்மையான சருமத்திற்காக மருத்துவர்கள் பரிந்துரைக்கும் சோப்புகளையே பயன்படுத்த வேண்டும்.
மாய்ஸ்ட்ரைசிங் செய்ய வேண்டும்: குளிர்காலத்தில் குழந்தைகளின் சருமம் ஈரப்பதத்தை அதிகமாக இழக்கும். ஆகவே குளித்தவுடன், குழந்தையின் சருமத்தில் மாய்ஸ்ட்ரைசரை பயன்படுத்த வேண்டும். நல்ல தரமான மாய்ஸ்ட்ரைசர், அதாவது வாசனை திரவியங்கள், வண்ணங்கள் ஆல்கஹால் போன்றவை இல்லாத மாய்ஸ்ட்ரைசரை பயன்படுத்தலாம். ஏனெனில் இவை உங்கள் குழந்தையின் சருமத்தில் எரிச்சலை உண்டாக்கும்.
குளிர்காலத்தில் குழந்தைகளின் சருமத்தில் ஏற்படும் வறட்சியினைப் போக்க பாதாம் எண்ணெய் (Almond Oil), கற்றாழை, ஆலிவ் எண்ணெய் போன்ற இயற்கையான பொருட்களை பயன்படுத்தலாம். அல்லது மருத்துவர்கள் பரிந்துரைக்கும் பாடி லோஷன்களையும் பயன்படுத்தலாம். இவை குழந்தையின் சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்க உதவும்.
இரசாயனப் பொருட்களை தவிர்க்க வேண்டும்: குழந்தைகளுக்கான லோஷன், பவுடர், எண்ணெய், சோப்பு போன்றவற்றை தேர்ந்தெடுக்கும் போது பாரபென்கள், வாசனை திரவியங்கள், செயற்கை நிறங்கள் போன்றவை இல்லாத பொருட்களை தேர்ந்தெடுப்பது நல்லது.
ஆயில் மசாஜ்: குளிர்காலத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் வறட்சியினைத் தடுக்க ஆயில் மசாஜ் செய்யலாம். இதற்காக ஆலிவ் அல்லது அஸ்வகந்தா எண்ணெய்யை பயன்படுத்தி, மென்மையாக மசாஜ் செய்யலாம். குளிப்பாட்டுவதற்கு முன்பு இந்த எண்ணெயில் மசாஜ் செய்து விட்டு 15 நிமிடங்கள் அப்படியே விட்டு விடுங்கள். அதற்கு பிறகு வெதுவெதுப்பான நீரில் குழந்தையை மென்மையான சோப்பால் குளிப்பாட்டுங்கள்.
ஆடையில் கவனம்: குழந்தைகளின் சருமம் சென்சிடிவானது. குளிர்காலத்தில் கம்பளி ஆடை போன்றவற்றை பயன்படுத்துவர். அவற்றை அதிகமாக பயன்படுத்தும் போது, சருமத்தில் வறட்சி ஏற்பட்டு சரும எரிச்சல், சொறி போன்றவை ஏற்படும். எனவே மென்மையான பருத்தி ஆடைகளை உடுத்திவிட வேண்டும்.
மின் விசிரி மற்றும் ஏசி: பனிக் காலத்தில் இவற்றின் கீழ் குழந்தை இரவு நேரத்தில் நீண்ட நேரம் உறங்கும்போது குழந்தையின் சருமத்தில் வெடிப்பு ஏற்படலாம். இதனால் முடிந்தவரை அவற்றை தவிர்ப்பது நல்லது. இல்லை என்றால் குறைத்துக்கொள்ளுங்கள். குழந்தை கதகதப்புடன் நிம்மதியாக உறங்கும் வகையில் விரிப்பான்களை தயார் செய்துகொடுங்கள்.
இதையும் படிங்க: தீபாவளிக்கு செம்ம க்யூட்டா எப்படி ரெடி ஆகலாம்: முகத்துக்கும், கூந்தலுக்கும் இதை ட்ரை பண்ணுங்க.!