கரோனா வைரஸின் தாக்கம் குறையத் தொடங்கியுள்ள நிலையில் குரங்கு அம்மை நோய் பரவத்தொடங்கியுள்ளது. கடந்த 7-ம் தேதி முதல் குரங்கம்மை தொற்று லண்டனில் கண்டறியப்பட்டது.
தற்போது 12-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை. மேலும் பல நாடுகளுக்கு குரங்கம்மை பரவக்கூடும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுவரை கண்டறியப்பட்ட குரங்கம்மை தொற்றுகளில், யாருக்கும் நேரடி பயணத் தொடர்புகள் ஏதும் இல்லை என்றும், இது வழக்கத்திற்கு மாறான ஒன்று என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாதாரணமாக குரங்கம்மை பாலியல் ரீதியாக பரவக்கூடியத் தொற்று அல்ல என்றும், அதேநேரம் அண்மையில் கண்டறியப்பட்ட குரங்கம்மை தொற்றுகளில், ஆண்கள் பிற ஆண்களுடன் பாலியல் உறவு வைத்துக் கொண்டதன் காரணமாகவே பரவியதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. குரங்கம்மை பாலியல் தொடர்புகளால் பரவும் என இதற்கு முன்னர் தெரிவிக்கப்படவில்லை, ஆனால் இது பாலியல் உறவு காரணமாகவும் பரவுகிறது என தற்போது தெரியவந்துள்ளது. பலருடன் பாலியல் உறவு வைத்துக்கொள்பவர்களுக்கு அதிகளவு குரங்கம்மை பரவுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்பிரிக்கா அல்லாத பிற நாடுகளில் குரங்கம்மை வைரசை கட்டுப்படுத்தலாம் என்றும், கட்டுப்படுத்தக்கூடிய நிலையில்தான் வைரஸ் பரவல் இருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குரங்கம்மை வைரஸ் பரவலை, கரோனா வைரஸுடன் ஒப்பிட முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குரங்கம்மை வைரஸில் இதுவரை எந்தவித உருமாற்றமும் ஏற்படவில்லை என்றும், பெரும்பாலும் உருமாற்றம் அடைய வாய்ப்பில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரியம்மை தடுப்பூசி குரங்கம்மைக்கு எதிராகவும் செயல்படுவதால், பெரியம்மை தடுப்பூசி இருப்பு குறித்து உலக நாடுகள் மதிப்பாய்வு செய்து வைக்க வேண்டும் என்றும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க:கர்நாடகாவில் கோர விபத்து: 8 பேர் உயிரிழப்பு; 26 பேர் படுகாயம்