டெல்லி: மைக்ரோவேவ் அவனில் யன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பாத்திரங்கள் நச்சுத்தன்மை உடைய துகள்களை பில்லியன் கணக்கில் வெளிவிடுவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மைக்ரோவேவ் ஓவனில் சிறிய வகை பிளாஸ்டிக் பாத்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதன் அளவைப் பொறுத்து ஒரு சதுர சென்டி மீட்டருக்கு நச்சுத்தன்மை உடைய இரண்டு பில்லியன் நானோபிளாஸ்டிக் மற்றும் நான்கு மில்லியன் மைக்ரோ பிளாஸ்டிக்கை வெளிவிடுவதாக ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சிகரமான தகவலைத் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து சுற்றுச்சூழல் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த செய்திகள் வெளியிடும் இதழில் கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது. அதில் இந்த நானோபிளாஸ்டிக் மற்றும் மைக்ரோபிளாஸ்டிக் மனிதனின் சிறுநீரகச் செல்களில் தேங்கி கிடக்கும் எனவும்; இதனால் சிறுநீரகத்தின் செல்கள் பல இறந்து விடும் அபாயம் உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இது குறித்து அந்த கட்டுரையின் வாயிலாக பேசியுள்ள, ஆய்வின் முதன்மை ஆசிரியரும் அமெரிக்காவின் நெப்ராநஸ்கலிங்கன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவருமான காசி அல்பாப் ஹுசைன், " அன்றாட வாழ்கையில் எவ்வளவு மைக்ரோ மற்றும் நானோ பிளாஸ்டிக்கை உட்கொள்கிறோம் என்பதை நாம் ஒவ்வொருவரும் அறிந்து வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தினார்".
இந்த ஆய்வு நச்சுத்தன்மையுடைய பிளாஸ்டிக் துகள்கள் தொடர்பான பல ஆய்வுகளோடு ஒத்துப்போவதாக ஆய்வாளர் ஹுசைன் குறிப்பிட்டுள்ளார். மேலும் இது குறித்து பேசிய அவர், பாலிப்ரொப்பிலீன் மூலம் தயாரிக்கப்படும் இரண்டு பிளாஸ்டிக் பாத்திரங்கள், பாலிஎத்திலீனால் தயாரிக்கப்பட்ட பை மற்றும் அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட இரண்டு பிளாஸ்டிக் ஆகியவை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதாக கூறினார்.
இந்த ஆய்வில், குறிப்பிட்ட அந்த பாத்திரங்களில் அசிட்டிக் அமிலம் அடங்கிய திரவத்துடன் சேர்த்து பால் பொருட்கள், பழங்கள், காய்கறிகள் உள்ளிட்ட சில பொருட்களை வைத்து பாத்திரங்களை மைக்ரோவேவ் அவனில் சுமார் மூன்று நிமிடம் ஹை ஃப்ளேமில் சூடாக்கியுள்ளனர். அதன் பிறகு அந்த திரவத்தை மட்டும் தனியாக எடுத்து அதில் அடங்கியுள்ள மைக்ரோ மற்றும் நானோபிளாஸ்டிக் படிவங்களை பகுப்பாய்வு செய்துள்ளனர்.
இதில் ஒரு மில்லிமீட்டர் அளவில் ஆயிரத்திற்கு ஒன்று என்ற எண்ணிக்கையில் மைக்ரோ பிளாஸ்டிக் இருந்துள்ளது. நானோ பிளாஸ்டிக் இதையும் விட நுண்ணிய துகள்களாக காணப்பட்டது. இவை அனைத்தும் மைக்ரோவேவ் ஓவனில் பயன்படுத்தும் பாத்திரங்கள் மற்றும் அதில் உள்ள பொருட்களைப் பொறுத்து மாறுபடலாம் எனவும் அந்த ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.
இந்த நச்சுத்தன்மை உடைய பிளாஸ்டிக் துகள்கள், தனிமனிதர் உட்கொள்ளும் உணவுகள் அடிப்படையில், கைக்குழந்தைகள் உட்கொள்ளும் பால் பொருட்கள் முதல் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவுப்பொருட்கள் வரை அனைத்திலும் கலந்துள்ளன என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அதுமட்டுமின்றி சுமார் 6 மாதங்கள் வரை எடுத்து வைத்து பயன்படுத்தப்படும் குளிர்பானங்கள் முதல் வெளியில் வைத்து பயன்படுத்தப்படும் பொருட்கள் வரை அனைத்திலும் மைக்ரோ மற்றும் நானோ பிளாஸ்டிக்கின் வெளியீட்டை நூறு சதவீதம் உறுதிசெய்துள்ளதாகவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
மேலும், இந்த நச்சுத்தன்மை உடைய பிளாஸ்டிக் துகள்கள் சிறுநீரகத்தின் செல்களை நேரடியாகப் பாதிக்கும் என ஆய்வின் மூலம் உறுதிபடுத்தியுள்ள ஆய்வாளர்கள், மக்கள் அதன் விளைவை பொருட்படுத்தாமல் பாலிப்ரோப்பிலீன் பாத்திரங்கள், பாலிஎத்திலீன் பைகள் உள்ளிட்டவை பொதுவாக மைக்ரோ பிளாஸ்டிக்கை விட சுமார் 1,000 மடங்கு அதிகமான நச்சுத்தன்மை உடைய நானோ பிளாஸ்டிக்கை வெளியிடும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: மாரடைப்பு வரப்போகுதா... அறிகுறிகளை வைத்து கண்டுபிடிக்கலாம்: நிபுணர்கள் கூறுவது என்ன?