சென்னை: ஞானப்பல் அல்லது அறிவுப்பல் என்ற இந்த கடவாய் பல் 17 முதல் 24 வயதிற்கு இடைப்பட்ட காலத்தில் முளைக்கும் பல். கொஞ்சம் ஞானம் வந்த பிறகு முளைக்கும் பல் என்பதால் அதற்கு ஞானப்பல் எனப் பெயரிட்டதாக வீட்டில் பெரியவர்கள் சொல்லிக் கேட்டிருப்போம். குழந்தைப் பருவத்தில் வாய் முழுவதும் பல் முளைத்தபோது ஏற்படாத வலி கடைசியாக முளைக்கும் இந்த ஞானப்பல் ஏற்படுத்தி விடும்.
ஈறுகள் மூத்து வலிமை அடைந்த பின் அதை உடைத்துக்கொண்டு வெளியேறும் இந்த ஞானப்பல், அருகில் இருக்கும் பற்களுக்கு இடையே முட்டி மோதி முளைத்து விடும். அந்த நேரம் ஈறுகளில் புண் ஏற்படலாம், பல் நெருக்கமாக இருப்பதால் முறையாகச் சுத்தம் செய்ய முடியாமல் பற்களில் சொத்தை ஏற்படலாம் இப்படிப் பல பிரச்சனைகளை இந்த ஞானப்பல் உருவாக்கி விடும். ஆனால் சிலருக்கு இந்த ஞானப்பல் முளைப்பதும் தெரியாது, இருப்பதும் தெரியாத என்ற வகையில் அமைதியாகச் சத்தம் இல்லாமல் முளைத்துவிடும்.
ஞானப் பற்களை அகற்ற வேண்டுமா? முன்பு கூறியது போல ஞானப்பல் முளைத்த பிறகு ஈறுகளுக்கு அருகே நீர்க் கட்டி, சொத்தைப் பல் உருவாகுதல் சைனஸ் போன்ற பிரச்சனைகள் வந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். சிகிச்சை என்றால் மருந்து மாத்திரைகளைக் கொண்டு சரி செய்வது அல்ல... ஞானப்பல்லை மருத்துவர் பரிந்துரையுடன் அகற்றி விடுவது.
அது அவ்வளவு சுலபமான காரியமும் அல்ல. சொத்தைப் பல்லை அகற்றுவதுபோல் இந்த பல்லை அவ்வளவு எளிதாக அகற்ற முடியாது.மிக வலிமையாக இருக்கும் இந்த பல்லால் அருக்கில் இருக்கும் பற்களின் ஈறுகளுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் அகற்ற வேண்டும். தொந்தரவுகளை வைத்துக்கொண்டு ஞானப்பல்லை அகற்றாமல் வைத்திருந்தால் வரும் காலத்தில் பல்வேறு பிரச்சனைகளுக்கு அது வழிவகை செய்யும்.
ஞானப்பற்கள் முளைக்கத் தொடங்கும்போதே வலி; ஞானப்பற்கள் முளைக்கத் தொடங்கும்போதே ஏற்படும் பிரச்சனையால் தொற்று அண்டை பற்களுக்குப் பரவும். இதனால் தாடை எலும்பு பலவீனம் அடைவதுடன் சீழ் வைப்பது அல்லது ஈறுகளில் நோய்த் தொற்று ஏற்படுத்துவது, வாய் தொற்று, காது வலி, உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை உருவாக்கும். இதை முன்கூட்டியே அறிந்துகொள்வதன் மூலம் ஞானப்பல் வெடித்து வெளியே வருவதற்கு முன்பே அந்த பல்லை அகற்ற மருத்துவர் பரிந்துரைப்பார்.
ஞானப்பல்லை அகற்ற வேண்டுமா.? நமது முன்னோர்கள் இறைச்சி, காய் கறி மற்றும் கடினமான உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அனைத்தையும் பல்லால் நொறுங்க கடித்து, உண்டு, உயிர் வாழ்ந்தவர்கள். காலப்போக்கில் மனிதர்கள் மென்மையான உணவுகளை உட்கொள்ளத் தொடங்கிய நிலையில் பற்கள் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியம் வலு இழந்துவிட்டது என மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்நிலையில், இந்த பற்கள் முளைத்து வரும்போதோ அல்லது முளைத்த பிறகோ உங்களுக்கு எவ்வித அசவுகரியமும் இல்லை என்றால் அந்த பல்லை அகற்றுவது தேவை அற்றது என்றே மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இதையும் படிங்க: Spices For Weight Loss Tips In Tamil: அஞ்சறைப் பெட்டிக்குள் இப்படி ஒரு ரகசியமா? இது தெரியாம போச்சே.!