சென்னை: பொதுவாக அதிக உடல் பருமன் உடையவர்கள் தங்கள் உடல் எடை மற்றும் தொப்பையைக் குறைக்கத் தினமும் பல வகையான ஆரோக்கியமான உணவுகள், ஜிம், டயட் உள்ளிட்டவைகளை பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து மேற்கொள்ளுவார்கள். அதனுடன் பெரிய அளவில் செலவு இல்லாமல் உடல் எடையையும், வயிற்றில் தேவையற்ற கொழுப்புகளால் ஏற்படும் தொப்பையையும் குறைக்கப் பப்பாளி சிறந்த தீர்வாக இருக்கும் என உணவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். இதனுடன் நீங்கள் அன்றாடம் மேற்கொள்ளும் உடற்பயிற்சியையும் கடைப்பிடியுங்கள்.
உடல் எடை மற்றும் தொப்பை அதிகரிப்பதற்கான காரணம்:
உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபடுவதற்கு முன்பு முதலில் எதனால் உங்களுக்கு எடை அல்லது தொப்பை போடுகிறது என்பதன் காரணத்தைத் தெரிந்து கொள்வது அவசியம். காலை எழுந்ததில் இருந்து நீங்கள் என்னென்ன உணவை எடுத்துக்கொள்கிறீர்கள் என்பதை உற்று நோக்குங்கள்.
உங்கள் உணவுப் பழக்கங்களில் துரித உணவு வகைகள் அதிக அளவில் இடம் பெறுகிறதா என்பதைக் கவனியுங்கள். பூரி, நூடல்ஸ், பாஸ்தா, சிப்ஸ், கூல்டிரிங்ஸ், எண்ணெயில் பொரித்தவை ஆகிய உணவு வகைகள் உடல் ஆரோக்கியத்தைக் குறைப்பதோடு, உடலில் தேவையற்ற கொழுப்பையும் சேர்க்கிறது. இது தான் பலருக்கும் தொப்பை போடுவதற்கான காரணமாக இருக்கிறது.
மேலும் காலையில் சாப்பிடும் 2 தோசை அல்லது இட்லி உங்கள் வயிறு நிரம்புவதற்கு ஏற்றதாக இருக்காது. இதனால் இடையில் பசி ஏற்பட்டு ஏதேனும் நொறுக்குத் தீனிகளை உட்கொள்ள வேண்டிய சூழல் ஏற்படும், அப்படி உண்ணும் நொறுக்குத் தீனிகளும் ஆரோக்கியமானதாக இருப்பதில்லை. இது உடல் எடை அதிகரிக்க முக்கிய காரணமாக இருக்கும்.
எனவே உடல் எடையை அல்லது தொப்பையைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபடுவதற்கு முன்பு என்ன உணவை உட்கொள்கிறோம் என்பதில் தினமும் கவனமாக இருங்கள்.
தொப்பையைக் குறைப்பதில் பப்பாளியின் பங்கு:
ஒரு பழம் சாப்பிடுவது உடல் எடையைக் குறைக்க உதவும் என்று சொல்வது மிகவும் கடினம். ஏனெனில் எடை மேலாண்மை என்பது ஒரு சிக்கலான பிரச்சனை. உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்பதற்காகப் பலர் உணவைக் குறைத்துக்கொள்வது உண்டு. ஆனால் அப்படி உணவைக் குறைப்பதால் நம் உடலுக்குத் தேவையான வைட்டமின் சத்துக்கள், நார்ச்சத்துகள், கலோரிகள் கிடைக்காமல் போகலாம்.
எனவே ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைக்க, நீங்கள் சரியான அளவு புரதங்கள், கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் கொழுப்புகளை கொண்ட ஒரு சீரான உணவை உண்ண வேண்டும். பழங்களில் ஊட்டச்சத்துக்கள் இருந்தாலும், கலோரிகளின் அடிப்படையில் அவற்றின் அளவு மிகவும் முக்கியமானது என உணவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
பப்பாளியில் கலோரிகள் மிகக் குறைவாகவே இருக்கும். மேலும் இதில் உள்ள அதிக அளவிலான ஆன்டி - ஆக்சிடண்ட்டுகள் மற்றும் நார்ச்சத்துக்கள் உடல் எடையைக் குறைக்கவும் தேவையற்ற கொழுப்புகளைக் கரைக்கவும் உதவி செய்கிறது. 100 கிராம் பப்பாளியில் 32 கலோரிகள் மட்டுமே உள்ளது. இது தவிர, நம் உடலுக்குத் தேவையான வைட்டமின் ஏ, சி, ஈ போன்ற சத்துக்களும் இப்பழத்தில் ஏராளமாக உள்ளன. அதனால் தான் உணவில் பப்பாளியை சேர்த்துக் கொள்வது நன்மை பயக்கும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர்.
உடல் எடை குறைய பப்பாளியை எப்படி சாப்பிட வேண்டும்:
- ஒரு கப் பால் குடித்தபின் அரை மணி நேரம் கழித்து பப்பாளி பழத் துண்டுகளை எடுத்துக் கொள்ளுங்கள். இது வயிறு நிரம்பிய உணர்வை தருவதோடு பசியைக் கட்டுப்படுத்துவதால் இடையில் நொருக்கு தீனிகள் சாப்பிட வேண்டியது இருக்காது.
- பப்பாளியை தயிரில் நறுக்கிப்போட்டு காலை உணவில் சாப்பிட தொப்பை கொழுப்பு கரையும். அத்துடன் ஊறவைத்த உலர் பழங்களை சாப்பிட்டால் நீண்ட நேரம் வயிறு நிரம்பி இருக்கும், அதிகமாக சாப்பிடுவதை தவிர்ப்பதால் தொப்பை குறைய வழி கிடைக்கும்.
- குறுகிய காலத்தில் தொப்பை கரைய காலை உணவில் ஒரு கிளாஸ் பால் மற்றும் பப்பாளி சாப்பிடுங்கள். பாலுடன் பப்பாளியும் சேர்த்து உண்பதால், புரதச்சத்தும் கிடைத்து பல மணி நேரம் வயிறு நிறைந்திருக்கும். உடல் எடையை குறைக்க இது பெரிதும் உதவும்.
- சிலருக்கு வெறும் பப்பாளி சாப்பிட பிடிக்காது. இப்படி பிடிக்கவில்லை என்றால் பப்பாளி சாட் செய்தும் சாப்பிடலாம். பப்பாளி சாட் செய்ய பப்பாளியை துண்டுகளாக நறுக்கி, அதன் மீது கருப்பு உப்பு மற்றும் கருப்பு மிளகு தூள் தூவி உட்கொள்ளுங்கள். இப்படி சாப்பிட சீக்கிரம் தொப்பை குறையும்.
பப்பாளி உடல் எடையைக் குறைப்பது மட்டுமல்லாமல் செரிமான ஆற்றலை மேம்படுத்துவது, மலச்சிக்கலை சரி செய்வது, சருமப் பளபளப்பை உண்டாக்குவது ஆகியவற்றுக்கும் உதவும் என்பதால் ஒருங்கிணைந்த ஆரோக்கியத்தை பெற முடியும்.
இதையும் படிங்க: வெற்றிலை பாக்குப் போடுவது நல்லதா? கெட்டதா? மருத்துவர்கள் கூறுவது என்ன?