சென்னை: தீபாவளி திருநாள் நெருங்கி வரும் நிலையில் வீடுகளில் பலகாரம் தயார் செய்யும் பணி மிகத் தீவிரமாக நடைபெற்று வரும். அந்த வகையில் தீபாவளி பலகாரம் என்றால் அந்த லிஸ்டில் முதல் இடம் பிடிப்பது முறுக்குதான். ஆனால் இதில் ஒரு சிக்கல் இருக்கிறது. பல வீடுகளில் பல வருடங்களாகத் தீபாவளிக்கு எந்த வகையான முறுக்கு செய்வார்களோ அதே முறுக்கைத்தான் மீண்டும், மீண்டும் செய்வார்கள். தமிழகத்தைப் பொருத்தவரை பல்வேறு பகுதிகளில் அந்தந்த ஊர் வழக்கத்திற்கு ஏற்ப முறுக்கு வகைகள் மாறுபடும். அப்படி என்னென்ன முறுக்கு வகைகள் உள்ளன என்பதைப் பார்க்கலாம்.
முறுக்கு வகைகள்: கைமுறுக்கு, நெய் முறுக்கு, முள்ளு முறுக்கு, ரிப்பன் முறுக்கு, தேன் குழல் முறுக்கு, அச்சு முறுக்கு, கல்யாண சீர் முறுக்கு, தேங்காய்ப்பால் முறுக்கு, ஜவ்வரிசி முறுக்கு, பூண்டு முறுக்கு, கார முறுக்கு, உலக புகழ்பெற்ற மணப்பாறை முறுக்கு எனப் பல வகையான முறுக்குகள் உள்ளன. ஆனால் இந்த அத்தனை முறுக்கிற்கும் பொதுவாகத் தேவைப்படும் பொருட்கள் உளுந்து மாவு, அரிசி மாவு, கடலை மாவு எண்ணெய், வெண்ணெய், சீரகம், பெருங்காயம், கருப்பு எள்ளு, உப்பு, மிளகாய்ப் பொடி மற்றும் ஓமம்.
இந்த பொருட்களை அவரவர் தேவைக்கு ஏற்படப் பயன்படுத்துவார்கள். அச்சு முறுக்கில் மட்டும் இனிப்பு சேர்ப்பதால் அதில் மட்டும் சர்க்கரை சேர்த்துக்கொள்வார்கள். உங்கள் வீடுகளிலும் இதில் ஏதோ ஒரு வகையான முறுக்கைத்தான் செய்வீர்கள். பல வகையான முறுக்குகள் இருக்கும் நிலையில் இந்த வருடம் இதில் இருந்து நீங்கள் தயார் செய்து உட்கொள்ளாத வேறு முறுக்கைத் தயார் செய்து தீபாவளியைக் கொண்டாடுங்கள்.
முறுக்கை எவ்வாறு சேமித்து வைக்கக்கூடாது? மேலும், முறுக்கு தயார் செய்த பிறகு அதை பிளாஸ்டிக் பக்கெட்டில் நியூஸ் பேப்பரை விரித்து சுடசுட போட்டுப் பாதுகாப்பாக எடுத்து வைப்பது சில வீடுகளில் நடைபெறும் வழக்கம். தயவு செய்து இந்த பழக்கத்தைக் கைவிட வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். நீங்கள் பிளாஸ்டிக் பாத்திரத்தில் சூடாக முறுக்கைப் போட்டு எடுத்து வைப்பதால் உடலுக்கும், ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கும் பல பிரச்சனைகள் ஏற்படலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
அதற்கு மாற்றாக, சில்வர் பாத்திரத்தை நன்றாகக் கழுவி வெயிலில் காய வைத்து, பருத்தி துணியால் துடைத்து அந்த பாத்திரத்தில் முறுக்கைச் சேமித்து வையுங்கள் என்கின்றனர் மருத்துவர்கள். முறுக்கு மட்டும் அல்ல நீங்கள் தயார் செய்யும் அனைத்து பலகாரங்களையும் இதுபோன்று பாதுகாப்பது ஆரோக்கியத்திற்குச் சிறந்தது எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: How to do lakshmi kubera Pooja on Diwali: வறுமை நீங்கி செல்வம் செழிக்க.. தீபாவளி அன்று இதுபோன்று பூஜை செய்யுங்கள்.!